புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவரேனும் சமூக விரோதச் செயற்பாடுகளிலோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கையிலோ ஈடுபடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி அளித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, இதனை பொலிஸ் அறிக்கைகளிலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆவா குழுவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, தனக்கு விசுவாசமான இராணுவ அதிகாரியொருவரை பயன்படுத்தி உருவாக்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.
‘நாங்கள் இராணுவத்தில் இருந்த காலத்தில் தாக்குதல் கும்பல்களை அழிப்பதற்காக அன்றி எந்தவித அழிவை ஏற்படுத்தும் குழுக்களையும் அமைப்பதற்கு முயற்சித்திருக்கவில்லை.
சில அமைச்சர்கள் எதனை சிந்தித்துக்கொண்டு இவற்றை கூறுகிறார்கள் என எனக்குத் தெரியாது. நாட்டில் இடம்பெறுகின்ற அனைத்து நடவடிக்கைகளிலும் அரசியல்வாதிகள் தலையிடுவதனால்தான் பிரச்சினை பெரிதாகின்றது.
கிராமங்களில் இடம்பெறுகின்ற சிறிய பிரச்சினைகளையும் அவர்கள் பெரிதுபடுத்தி பேசுவதுதான் எமது நாட்டில் காணப்படுகின்ற கீழ்த்தரமான பழக்கம்.
ஆவா மட்டுமல்ல, யுத்தத்தின் பின்னர் பல்வேறு குழுக்கள் உருவாகின்றன. ஏனென்றால் யுத்த சூழ்நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் அதிலிருந்து இலாபத்தைப் பெறும் குழுக்கள் உள்ளன. எனினும் பொலிஸாரும், இராணுவமும் அவற்றை ஒடுக்கி வருகின்றன. எமது காலத்தில் ஒரு சிறு குழுவேனும் தலைதூக்குவதற்கு இடமளிக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஆவா குழு உருவாவதற்கு கோட்டாபய ராஜபக்சவும் உதவினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
2015 ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த நிலையில், அதனை தடுக்க இராணுவ சதிப்புரட்சியொன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டையும் நிராகரித்த முன்னாள் இராணுவத் தளபதி, அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் ஏன் கைதுசெய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
”2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற இராணுவ சூழ்ச்சி என்ற குற்றச்சாட்டானது இராணுவத்திற்கு ஏற்படுத்தப்பட்ட வரலாற்றிலேயே மிக மோசமான அகௌரவமாகும். அவ்வாறு இராணுவ சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் எம்மை கைது செய்து சிறையில் அடைத்திருக்கலாம். இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்ததைத் தவிர எமது ப`டையினர் ஒருபோதும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.