காலி ஹராபிட்டிய வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிக்கும் நடைபவனி இன்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆரம்பமாகியது.
இந்த நடைபவனியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
நடை பவனிக்கான ஆரம்ப வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட இலங்கைக் கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார, மகேல ஜெயவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் தனது உரையில், ”இன்று தொடங்கும் நடை பவனி தெற்கில் புற்று நோயைப் போக்க எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை மட்டுமல்ல. எமது நாட்டில் நடைபெற்ற பல வருடகால தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரியாமைகள் போன்றவற்றை அகற்றவும் இந்த நடைபவனி உதவி புரியப் போகின்றது” என்றார்.

