Ad Widget

அரசியல்கைதி ஆனந்தராஜா தப்பியோட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜா, வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rasaiya-anantha-raj



தென்மராட்சியை சேர்ந்த 37 வயதுடைய இராசையா ஆனந்தராஜா என்ற அரசியல் கைதியே நேற்று முன்தினம் இரவு பத்து மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.



கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜா, 2012 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதன்பின்னர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி தனது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 17 ஆம் திகதியும், அதன்பின்னர் பதினொரு நாட்கள் கழித்தும் தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவருக்கு உடல் உள பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்தார்.



இதனையடுத்து குறித்த கைதியான இராசையா ஆனந்தராஜாவை அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்குமாறு சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்ற புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பணிப்புரை விடுத்திருந்தார்.



கடந்த 14 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 

தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளால் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வந்த போதிலும் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகவும், தப்பிச்சென்ற அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜாவை கைது செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts