யாழ் பாதுகாப்பு படை தலைமையகம் அதன் 20 ஆவது வருடப் பூர்த்தியை மிக விமரிசையாக கொண்டாடியது. இதனையொட்டி ஜுன் மாதம் 19 ஆம் திகதி முதல் அங்கு பல்வேறு ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஞாபகார்த்த நிகழ்வுகள் யாவும் விஷேட போதி பூசையினை தொடர்ந்து இடம்பெற்றன. அத்துடன் இந்நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் சேவையாற்றும் படைவீரர்கள் மற்றும் போரின்போது உயிரிழந்த படைவீரர்கள் ஆகியோருக்கு ஆசிவேண்டி விஷேட வழிபாட்டு நிகழச்சிகளும் இடம்பெற்றன.
மேலும், போரின் போது நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூறும் வகையில் பலாலியில் அமைந்துள்ள படைவீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் வளையம் சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. இதேவளை தலைமையகத்தின் 20 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு அச்சுவேலி புனித மரியாள் தேவாலாயத்திலும், மாவட்டபுரம் இந்து ஆலயத்திலும், யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசலிலும், பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பாதுகாப்பு படை தலைமையகமானது சட்டவிரோத குடியேற்றத்தை தவிர்க்கும் வகையில் 1996 ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இராணுவத்தின் முன்னணி தலைமையகமாக மாற்றப்பட்டது. அத்துடன் யாழ் குடா நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது யாழ் பாதுகாப்பு படை தலைமையகமானது முக்கிய பங்கு வகித்தது.