வடக்கு மாகாண சபையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வலம்புரி பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு விளக்கம் அளித்து கடிதம் அனுப்புவது என வடக்கு மாகாண சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து நான்காவது அமர்வு நேற்றையதினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் காலை ஒன்பது மணியளவில் நடைபெற்றது.
இதன்போது கடந்த மாகாண சபை அமர்வில் வலம்புரி பத்திரிகை யில் 25.05.2016 அன்று வெளியாகியிருந்த விலகினார் ஆளுநர், நடத்தினார் சுமந்திரன் என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் விவாதம் நடைபெற்று பெரும் குழப்பங்களும் ஏற்பட்டிருந்தது. இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக குறித்த விடயம் சபை நடவடிக்கைகள் குழுவிற்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த சபை நடவடிக்கைகள் குழுவின் பரிந்துரைகளை வாசித்த அவைத்தலைவர் குறித்த செய்தி தொடர்பிலான விளக்கம் ஒன்றினை வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு அனுப்பி வைப்பது என்ற முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
குறித்த செய்தியில் தரவுத்தவறுகள் காணப்படுவதாகவும், இந்த தவறுகள் தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு சபை நடவடிக்கைள் குழு பரிந்துரை செய்யவில்லை. எனினும் தரவுத்தவறுகள் தொடர்பில் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு கடிதம் அனுப்பி வைப்பதற்கு பரிந்துரை செய்துள்ளதாக வும் சுட்டிக்காட்டிய அவைத்தலைவர், அதனை பத்திரிகையில் பிரசுரமாக்க கோருவதாகவும் சபையில் தெரிவித்தார்.