இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துக் கூறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை அமெரிக்க காங்கிரஸ் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸின் இலங்கை சம்பந்தமான ஆர்வக் குழு நாளைமறுதினம் அமெரிக்காவில் விசேட கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. இதில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நேற்றிரவு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் இலங்கை அரசு சார்பில், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் காரியவசம் பங்கேற்கவுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸின் கலந்துரையாடலில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயப்படவுள்ளது. அத்துடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் பேசப்படவுள்ளது. இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் காரியவசம் ஆகியோரிடம் அமெரிக்க காங்கிரஸினர் கேள்விகளை எழுப்பி, விடயங்களை அறிந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கலந்துரையாடலுக்குச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் தேசிய பாதுகாப்புச் சபை உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.