நாட்டின் அரச கரும மொழியாக தமிழ் மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தும், அது உரிய முறையில் அமுல்படுத்தப்படாத நிலையே காணப்படுவதாகத் தெரிவித்தள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பில் தற்போதைய அரசு கூடிய அக்கறை கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வினாக்களை எழுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அண்மையில் பாடசாலை அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த புதிய அதிபர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இடம்பெற்றபோது, அதில் வழங்கப்பட்ட வழிகாட்டல் குறிப்பேடுகள் மற்றும் கையேடுகள் என்பன தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட தமிழ் மொழி மூல அதிபர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் தெரிய வருகிறது. கல்வி அமைச்சில் தமிழ் மொழிக்கென தனியான பிரிவு இருக்கிறது. கல்வி இராஜாங்க அமைச்சராக தமிழர் ஒருவர் இருக்கிறார். இருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் தொடருகின்றன.
மேற்படி விடயம் மட்டுமல்லாது அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் பலவும் தமிழ் மூல பயனாளிகளுக்கு தனிச் சிங்கள மொழியூடான எழுத்து மூல கடிதங்கள் மற்றும் ஆவணங்களையே தொடர்ந்தும் அனுப்பி வருகின்ற நிலை தொடர்கிறது. எனவே, இதனை அவதானத்தில் கொண்டு, தமிழ் மொழி அமுலாக்கத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.