வடக்கு ஆளுநரின் உதவியைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு சுமந்திரன் கோரிக்கை!

அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே செயற்படும் நிலையில், அதற்குப் பாதகமாக யாரையும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நகரின் அபிவிருத்தி தொடர்பில் நேற்று ஆளுநர் அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டம் நிறைவடைந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

உலகவங்கியால் முக்கிய நகரங்களை அபிவிருத்திசெய்யும் திட்டத்தில் யாழ் நகரமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த இன்றைய கலந்துரையாடல்கள் ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்தது. இவ்வாறான கூட்டம் நடாத்துவதற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளதால் தான் நேரடியாக எதனிலும் தலையிடப்போவதில்லையென ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி மேற்கொள்ளவேண்டுமென சட்டம் எதுவும் கிடையாது. அதற்கென குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

வடமாகாண ஆளுநர் ஒரு முற்போக்குவாதி. மிகவும் சாதுரியமாக, எமது நலனுக்காக பல ஆண்டு காலமாக உழைத்த ஒருவர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமென்று ஆதரித்தமைக்காக, மூன்று முறை துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான ஒருவர் மட்டுமன்றி, அவரின் வீடும் எரித்து நாசமாக்கப்பட்டது. இவ்வாறான ஒருவரின் உதவியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் இருந்தால், எமது இனத்திற்கு நாங்கள் செய்யும் கேடான செயலாக இருக்க முடியும்.

அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயலில் ஆளுநர் செயற்படும்போது, அதற்குப் பாதகமான செயற்பாடுகளையம் சொற்பொழிவுகளையும் மேற்கொள்ளாமல் பொறுப்புணர்வோடு செயற்படுமாறு கோரிக்கைவிடுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts