காணாமல்போனோர் தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு இலங்கை அரசு அமைக்கவுள்ள தனிப் பணியகம் குறித்தான ஆரம்பகட்ட வரைவுநகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அதிலுள்ள 90 சதவீதமான சிபாரிசுகளுக்கு அக்கட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளது. அத்துடன், சில பரிந்துரைகளை மாற்றியமைக்குமாறும் கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது.
இலங்கையில், இடம்பெற்றது எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி அமெரிக்காவால் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
இதன்படி, நான்கு கட்டமைப்புகளின் கீழ் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசு தயாரானது. இதில் காணாமல்போனோர் பணியகத்தை அமைத்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குவை ஸ்தாபித்தல் போன்ற விடயங்களும் அடங்குகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னர் காணாமல்போனோர் பணியகத்தை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது என கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, மேற்படி சட்டமூலத்தின் ஆரம்பகட்ட வரைவுநகல் (முதலாவது வரைவு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்போது 90 சதவீதமான சிபாரிசுகளை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் உள்ள சில முக்கிய குறைப்பாடுகளை மாற்றியமைக்கும் படி தமது தரப்பில் இருந்து சிபாரிசுகளை கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. அத்துடன், காணாமல்போனோர் குறித்து முழு தகவல்களையும் அறிந்துக்கொள்ளும் உரிமை அவர்களது உறவினர்களுக்கு உள்ளதாகவும் கூட்டமைப்பு அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அமையவே தற்போது இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது என அறியக்கூடியதாக உள்ளது.
அதேவேளை, மேற்படி பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், பரணமக ஆணைக்குழு கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.