பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெசாக் தின செய்தி..
வெசாக் நிகழ்வினை, புத்த பெருமான் போதித்தவாறு அன்பு, பரிவிரக்கம், கருணை, மனஅமைதி ஆகிய நான்கு பிரம்மங்கள் ஊடாக உத்வேகம் பெறும் நற்குணங்கள் மிகுந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய ஆன்மீக அணுகுமுறையாக மாற்றிக் கொள்வது எமது நோக்கமாகக் காணப்பட வேண்டும்.
புத்தபெருமான் போதித்த தர்மத்திற்கு ஏற்ப வாழ்வதனைப் பழக்கப்படுத்திக் கொள்வதன் ஊடாகவே வெசாக் நிகழ்வு அர்த்தம் மிக்கதாக மாறுகிறது. எனவே, சமூகத்தில் யாராவது ஒரு பிரிவினரால் தவறொன்று நிகழுமாயின் நாம் அதனை உண்மைத் தன்மையினை அடிப்படையாகக் கொண்டே திருத்தியமைக்க வேண்டும். ஒரு தவறினை நற்குணம் ஊடாகவே போக்க வேண்டும். போக்கவும் முடியும். பகைமையை நட்புணர்வு மூலமே போக்க முடியும். வெஞ்சினம் கொண்டவரை அன்பு ஊடாகவே வெல்ல வேண்டும். மானிடப் பண்புகள் அற்றவனை மானிடப் பண்புகளைக் கொண்டும், அசத்தியத்தை சத்தியத்தைக் கொண்டும் வெற்றி கொள்ள வேண்டும்.
வெசாக் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு தர்மத்தின் மையக் கருத்து செறிவூட்டப்படும் வகையில் எமது வாழ்க்கை ஒழுங்கை வடிவமைத்துக் கொள்வது மிக முக்கியம் என்பதோடு, எம்மால் மேற்கொள்ளப்படும் பூஜைகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிகாட்டக் கூடிய, ஒற்றுமையையும், சகவாழ்வினையும் கட்டியெழுப்பக் கூடிய புனிதமிகு பணிகளாக மாறுவதைக் காணுவது எனது அபிலாசையாகும்.
தற்போதைய அரசாங்கம் புத்த சாசானத்தினதும், பிக்குமார் சமூகத்தினதும், மக்கள் அனைவரினதும் முன்னேற்றத்திற்காக வேண்டி முக்கிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெறிமுறைசார்ந்த, முன்னேற்றகரமான சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கத்தை மனதில் கொண்டு அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தப் புனிதமான வெசாக் போயா தினத்தில் ஆன்மீக முன்னேற்றம், சமூக புத்துயிராக்கம் என்பவற்றிற்காக வேண்டி செயலாற்ற அனைவரது உள்ளங்களும் சிறந்த தெளிவு பெறட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.