மாலபே மருத்துவக் கல்லூரியினை முற்று முழுதாக அரச மயப்படுத்த வேண்டுமென வடபிராந்திய அரச வைத்தியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி முகாமைத்துவ கல்லூரி என்ற பெயரில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
மருத்துவ கல்லூரிக்கான அனுமதியினை இலங்கை மருத்துவ சபையிடம் பெறவில்லை.
தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றினை ஆரம்பிக்கும் போது, மருத்துவ சபையின் அனுமதியினைப் பெற வேண்டும்.
முகாமைத்துவ கல்லூரி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மருத்துவ பீடத்திற்கு மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
மருத்துவக் கல்லூரி என கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். 7 அணிகளாகவும் ஒவ்வொரு அணியிலும் கிட்டத்தட்ட 100 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.
ஓவ்வொரு மாணவர்களிடமும் 100 முதல் 130 இலட்சம் வரை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
அவர்களுக்கான பரீட்சை நிறைவு பெற்றதன் பின்னர் அரச வைத்தியசாலைகளை பயன்படுத்த முடியுமென்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
மக்களுடன் மக்களாக வேலை செய்யும் எமக்கு மக்களின் உயிரில் மிகவும் அக்கறை உடையவர்கள் என்ற ரீதியில் தரம் குறைந்த மருத்துவக் கல்லூரியின் மூலம் வெளியேறவுள்ள வைத்தியர்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் ஆபத்து உள்ளது.
அரசாங்கம் மிக விரைவில் இந்தப் பிரச்சினைக்கு நடவடிக்கை மேற்கொண்டு, மாலபே மருத்துவக் கல்லூரியினை அரச மயப்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.