சம்பந்தனை பதவி விலகக் கோரியோர் நேரில் சந்தித்துப் பாராட்டு!

“தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சமஷ்டி தொடர்பில் தென்பகுதி மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். இதன் மூலமாகவே தென்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க முடியும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்திய கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

sampanthan

இவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இதன்போதே, இரா.சம்பந்தனிடம் மேற்படி கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக ஏழு கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடந்த வாரம் போராட்டம் நடத்தியிருந்தனர்.

தனக்கு எதிராகப் போராட்டம் நடத்திய கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கு இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்புக்கு அமைய, ஏழு கட்சிகளின் தலைவர்களும் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இரா.சம்பந்தனைச் சந்தித்தனர்.

கிளிநொச்சியில் இராணுவ முகாமுக்குள் சென்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம், ஏழு கட்சிகளின் தலைவர்களும் கேள்வி எழுப்பினர். இதற்கு இரா.சம்பந்தன், நடந்த உண்மைச் சம்பவத்தை விளங்கப்படுத்தினார். இதனையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட கட்சிகளின் தலைவர்கள், மக்களின் நிலங்களை அரசு ஊடாக மக்களிடம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவருக்குத் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண சபை சமஷ்டி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றது. இது தெற்கு மக்களிடையே அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதில் வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர், சமஷ்டி பிரிவினை அல்ல என்றும், இதனை கடந்த காலங்களில் சிங்களத் தலைவர்களே முன்வைத்தனர் என்பதையும் குறிப்பிட்டார். “தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சமஷ்டி தொடர்பில் சிங்கள மக்களுக்குப் புரியும்படி விளங்கப்படுத்துங்கள். இதற்காக சிறந்த சட்டத்தரணிகளை – விரிவுரையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். இதன் மூலமே இந்த விடயத்துக்குத் தீர்வு காண முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், தங்களை அழைத்துக் கலந்துரையாடி உண்மையான விடயங்களை தெளிவுபடுத்தியமைக்கு கட்சிகளின் தலைவர்கள் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி நல்ல வரட்பிரசாதம் என்றும், இந்தப் பதவிக் காலப்பகுதியில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts