“வடக்கு, கிழக்கில் தொடரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கைதுவேட்டை உடன் நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் அச்சமின்றி வாழும் நிலைமை அங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.” இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
“கைதுகள் இனிமேலும் தொடர்ந்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தயக்கமின்றி எடுப்போம். காரணமின்றி கைது செய்யப்பட்டவர்கள் உடன் விடுவிக்கப்படவேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி யாழ். தென்மராட்சி மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட பின்னர் முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதரண மக்கள் என 33 பேர் இதுவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வடக்கு, கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொடர் கைதுகளால் வடக்கு, கிழக்கில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவுள்ள நடவடிக்கை என்னவென்று அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கைதுவேட்டையை அனுமதிக்க முடியாது. இந்தக் கைது வேட்டைக்கு எதிராக சர்வதேச சமூகத்தினர் குரல்கொடுத்துள்ளனர் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
எனவே, வடக்கு, கிழக்கில் தொடரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கைதுவேட்டை உடன் நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்கள் அச்சமின்றி வாழும் நிலைமை அங்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.
எமது இந்த வலியுறுத்தலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்துவிட்டேன். எனவே, இந்தக் கைதுவேட்டைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
கைதுகள் இனிமேலும் தொடர்ந்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தயக்கமின்றி எடுப்போம். காரணமின்றி கைதுசெய்யப்பட்டவர்கள் உடன் விடுவிக்கப்படவேண்டும்” – என்றார்.