புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், வான் ஒன்றில் வந்தவர்களால், நேற்று காலையில் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
திருக்கோவில் தம்பிலுவில் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்தே நேற்று காலை ராம், இனந்தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த ராம், 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதன்பின்னர், 2013 ஆம் ஆண்டு விடுதலையாகி திருமணம் செய்து தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று அவரது மனைவி மட்டக்களப்பிற்கு சென்ற பின்னர், தனிமையில் இருந்த அவரை காலை 8.30 மணியளவில் நீலநிற வான் ஒன்றில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.