சாவகச்சேரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வெடிபொருட்கள் நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத புலானய்வுப் பிரிவினரால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.