நல்லூரில் வெடிமருந்து பரல்கள் கண்டுபிடிப்பு

நல்லூர், கல்வியங்காடு, யமுனா வீதியிலுள்ள காணியொன்றில் புதையுண்ட நிலையில் வெடிமருந்து எனச் சந்தேகிக்கப்படும் பரல் ஒன்று திங்கட்கிழமை (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சில பரல்கள் அங்கு புதையுண்டு இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார், அந்த இடத்துக்கு பூரண பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன், பரல்களை மீட்டு அதனை பரிசோதிப்பதற்கான பொறுப்பை விசேட அதிரடிப் படையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மேற்படி பகுதியில் காணியொன்றை புதிதாக வாங்கிய ஒருவர் அந்தக் காணியில் கிணறு தோண்டிய போது, வெடிமருந்துகள் உள்ளடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பரல் ஒன்றை கண்டு, கிராமஅலுவலர் ஊடாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், அந்த இடத்துக்கு பாதுகாப்பு வழங்கியதுடன், பரல்களை மீட்பதற்காக விசேட அதிரடிப் படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

இதனடிப்படயில், அந்தப் பகுதியில் புதையுண்டிருக்கும் பரல்களை இன்று செவ்வாய்க்கிழமை (29) மீட்டு, அதனை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts