ஊடகப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்துங்கள்! – வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை

வடக்கில் கடந்த காலத்தில் ஊடகப் பணியின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப் பணிப்புரை விடுக்க வேண்டும் என்று நேற்று வடபகுதிக்கு வந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kayantha-jaffna-270316-seithy

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் தென்பகுதி ஊடகவியலாளர்கள் சுமார் நூறு பேர் வட பகுதிக்கு நேற்று மூன்று நாள் பயணமாக வந்துள்ளனர். இந்தக் குழுவினர் இன்று பல தரப்பினரையும் சந்திக்கவுள்ளனர். குறிப்பாக முப்படையினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர். மேலும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக, நினைவுத் தூபி ஒன்றையும் அமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையிலேயே வடக்கு ஊடகவியலாளர்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வடக்கில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் தாக்கப்பட்டனர் – கடத்தப்பட்டனர் – கொல்லப்பட்டனர். அதனைப் போன்று ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டு – அடித்து நொருக்கப்பட்டு – எரியூட்டப்பட்டும் உள்ளன. சர்வதேச ஊடக வரலாற்றில் முதன் முறையாக ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்று பத்து ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. சர்வதேச ஊடக சுதந்திர தினத்திற்கு முதல் நாள், 2006 ஆம் ஆண்டு ‘உதயன்’ பத்திரிகை வளாகத்தினுள் பிரவேசித்த ஆயுததாரிகள், நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த இரண்டு ஊடகப் பணியாளர்களைச் சுட்டுக் கொலை செய்ததுடன் தாக்குதலும் நடத்தியிருந்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதேபோன்று 2000 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன், 2006ஆம் ஆண்டு திருகோணமலையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட ‘சுடர் ஒளி’ – ‘உதயன்’ பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளர் சுகிர்தராஜன், யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட ‘உதயன்’ பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் ரஜிவர்மன், யாழ்.கொக்குவிலில் வீட்டில் வைத்து சுட்டுக் கொலைசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவன் நிலக்‌ஷன், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் வி.நிமலராஜ் ஆகியோர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவில்லை.

‘உதயன்’ பத்திரிகையின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம், அப்பத்திரிகையின் தலைமை அலுவலகம் என்பவற்றின் மீதான தாக்குதல், ‘உதயன்’ பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல், ‘உதயன்’ பத்திரிகை விநியோக ஊழியர் மீதான தாக்குதல் என்று எந்தவொரு சம்பவம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சகல சம்பவங்களும் பட்டியல்படுத்தப்பட்டு, உரிய விசாரணைகள் நீதியாக மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்குரிய ஏற்பாடுகளை ஊடகத்துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts