சொட்டு நீரும் எங்கள் சொத்தே!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ் மாவட்ட பிராந்திய அலுலகத்தின் ஏற்பாட்டில் சுத்தமான குடிநீருக்கான மக்களின் நலன் என்னும் கருப்பொருளில் உலக நீர் தின நிகழ்வின் மாபெரும் நடைபவனி நேற்று இடம்பெற்றது.

water

யாழ் பண்ணையில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அலுலகத்தில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை இந்த நடை பவனி சென்றது.

நிலத்தடி நீரை பாதுகாப்போம், சுத்தமாக இருக்கும் நீருக்கு புத்துயிர் அளிப்போம், இன்றைய மழை நீர் சேகரிப்பு நாளைய குடிநீர் பாதுகாப்பு, சொட்டு நீரும் எங்கள் சொத்தே, பொதுமக்கள் விழிப்படையுங்கள், போன்ற பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

மேலும், பிரதம அதிதியாக வடமாகாண தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பணிப்பாளர் பாரதிதாசன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்த மாபெரும் பேரணியினை ஆரம்பித்துவைத்தனர்.

இப் பேரணி யாழ் ஆஸ்பத்திரி, வேப்படி சந்தியூடாக யாழ் மாவட்ட செயலகம் வரை சென்றதோடு, அங்கு சுத்தமான குடிநீர் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.

இதில் மாவட்ட செயலக அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts