பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
அண்மையில் பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பில் இந்திய – இலங்கை ஆணைக்குழுத் திட்டத்தில் இணக்கம் காணப்பட்டு அதன்படி விரைவில் இதுதொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து குழுவொன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்தே இக்குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்ததாகவும், நேற்றைய தினம் பலாலி விமானநிலையத்தைச் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும், இக்குழுவினர் நேற்று இந்தியத் தூதரகத்தில் பலாலி விமானநிலைய விரிவாக்கல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டதுடன் இத்திட்டம் தொடர்பிலான இலங்கை அதிகாரிகளையும் சந்தித்துள்ளனர்.
இன்றைய தினம் இக்குழுவினர் பலாலி விமானநிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதுடன், இவ்விமான நிலையத்தை தொழிநுட்ப ரீதியில் எவ்வாறு தரமுயர்த்தலாம் எனவும் ஆராயவுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள குழுவினர் இந்திய விமானப்படையைச் சேர்ந்தவர்களா அல்லது சிவில் விமான நிலைய தொழிநுட்ப அதிகாரிகளா எனத் தெரியவில்லை எனவும் எப்படியிருப்பினும், பலாலி விமானநிலையத்தை பிரேதச விமானநிலையமாக மாற்றி, பலாலியிருந்து தென்னிந்தியாவிற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.