Ad Widget

மன்னாரில் நெல் கொள்வனவு ஆரம்பம்- அமைச்சர் ஐங்கரநேசன் பார்வையிட்டார்

மன்னார் மாவட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் சபையால் நெல் கொள்வனவு ஆரம்பமாகியுள்ளது. இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த திங்கட்கிழமை (14.03.2016) சென்று பார்வையிட்டுள்ளார்.

வடக்கில் நெல் உற்பத்தி இம்முறை அதிகமாக இருந்தபோதும் நெல்லைச் சந்தைப்படுத்த முடியாமல் இருப்பதாக வடக்கு முதலமைச்சரும் விவசாய அமைச்சரும் அண்மையில் பிரதம மந்திரியைச் சந்தித்துத் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போது, இது வடக்குக்கு மாத்திரம் அல்ல, முழு இலங்கைக்குமான பிரச்சினையாக உள்ளதெனவும், நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாகக் கொள்வனவு செய்ய விரைவில் ஆவன செய்வதாகவும் பிரதமர் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

தற்போது நெற்சந்தைப்படுத்தும் சபை நெல் கொள்வனவை ஆரம்பித்திருந்தபோதும் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்தே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மன்னாரில் நெல் கொள்வனவை நேரில் சென்று பார்வையிட்டு நெற்சந்தைப்படுத்தும் சபையின் அதிகாரிகளுடனும் விவசாயிகளுடனும் கலந்துரையாடியுள்ளார். இதன்போது இரண்டு தரப்பினரும் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

நெற்சந்தைப்படுத்தும் சபையால் மன்னாரில் ஒரு கிலோ கீரிச்சம்பா 50 ரூபாவுக்கும், சம்பா 41 ரூபாவுக்கும், நாட்டரிசி 38 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயம் விவசாயிகளுக்கு திருப்தியாக உள்ளபோதும், நெற்சந்தைப்படுத்தும் சபை ஒரு விவசாயியிடம் இருந்து 2000 கிலோ நெல்லை மட்டுமே கொள்வனவு செய்கிறது. இதனால் மீதி நெல்லை விவசாயிகள் தனியாருக்குக் குறைந்த விலைக்கே விற்கவேண்டியுள்ளது. அத்தோடு, நெற்சந்தைப்படுத்தும் சபை கொள்வனவுக்கான காசோலையை காலம் தாழ்த்தியே வழங்குவதால், விவசாயிகள் உடனடியாக காசு கிடைக்கும் என்பதால் குறைந்த விலையென்றாலும் தனியாருக்குக் கொடுக்கவே விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் அவர் குறிப்பிடுகையில்,

நெற்சந்தைப்படுத்தும் சபைக்கு மன்னாரில் 35 இலட்சம் கிலோ நெல் வரையில் மட்டும் சேமிப்பதற்கான களஞ்சிய வசதிகளே உண்டு. கடந்த ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லும் களஞ்சியங்களில் உள்ளதால் மேலதிக களஞ்சிய வசதி தேவைப்படுவதாக நெற்சந்தைப்படுத்தும் உத்தியோகத்தர்கள் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தனர். கூட்டுறவுத் திணைக்களத்தினரோடு பேசி மாந்தை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சிய சாலையையும், மாந்தை தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சிய சாலையையும் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நெற்சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்யும் நெல்லுக்கான பணத்தை உரிய காலத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

01

02

03

04

05

06

07

Related Posts