யாழ்ப்பாணத்தில் பணப்பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் வெங்காயத்தின் அறுவடைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. அச்சுவேலி பத்தைமேனி விவசாயிகளின் அழைப்பின் பேரில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி. ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோர் அப்பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2016) சென்று வெங்காயச் செய்கையைப் பார்வையிட்டுள்ளனர்.
அங்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விவசாயிகளுடன் கலந்துரையாடியபோது, யாழ்மாவட்டத்தில் இம்முறை 1832 ஹெக்டயர் பரப்பளவில் வெங்காயம் செய்கை பண்ணப்பட்டிருப்பதாகவும், ஹெக்டயருக்கு 15 தொன் விளைச்சல் எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் உரையாடுகையில்,
விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சந்தையில் சரியான விலை கிடைக்கவேண்டும். இதற்காக அறுவடைக் காலத்தில் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கவேண்டும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதியினதும், பிரதமரினதும் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து உருளைக்கிழங்குக்கும் பெரிய வெங்காயத்துக்குமான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை உயரும்போது, சிறிய வெங்காயத்துக்கு சந்தையில் கேள்வி அதிகரிக்கும். எனினும், சிறிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறும் மீளவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
பத்தைமேனிப்பகுதில் உள்ள பழுதடைந்த விவசாய கிணறுகளையும், நீண்டகாலமாகத் திருத்தப்பாடாத வீதிகளையும் அமைச்சர்; பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோரை அழைத்து சென்று காண்பித்த விவசாயிகள், அவற்றைப் புனரமைப்புச் செய்து தருமாறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.


