‘இராணுவச் சுற்றிவளைப்பின் போது ஒரு மகனையும், இந்தியாவுக்குச் சென்ற இன்னொரு மகனையும் இழந்து வருந்துகின்றேன்’ என தச்சந்தோப்பைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற தாயார் கூறினார்.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் காணாமற் போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற போதே, மேற்படி தாயார் இவ்வாறு கூறினார்.
1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி தச்சந்தோப்புப் பகுதியில் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பில் தலையாட்டி மூலம் 200 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரணை செய்துவிட்டு, 24 பேரைத் தடுத்து வைத்திருந்ததுடன், மிகுதிப் பேரை விடுதலை செய்தனர். 24 பேரில் எனது மகனும் இருந்தார். அதன் பின்னர் மகன் பற்றிய எந்தத் தகவலும் இன்றுவரையில் இல்லை.
எனது 2 ஆவது மகன் திருக்குமரன் கடல்வழியாக இந்தியா செல்வதற்காக கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி சென்றார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இன்றுவரையில் தெரியாது என்றார்.
‘இராணுவம் விடுவித்த மறுநிமிடம் வெள்ளைவான் கடத்தியது’
‘மானிப்பாய் இராணுவ முகாம் இராணுவ வீரர்களால் பிடிக்கப்பட்ட மாசிலாமணி தியாகராஜா (வயது 37), இராணுவம் விடுவித்த மறுநிமிடம் வெள்ளை வான் மூலம் கடத்தப்பட்டார்’ என தாயார் இராஜேஸ்வரி சாட்சியமளித்தார்.
‘நாங்கள் வரணியைச் சேர்ந்தவர்கள். எனது மகன் சண்டிலிப்பாயைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். எனது மருமகள் இருதயநோய் காரணமாக இறந்தார். 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி சண்டிலிப்பாயிலுள்ள வீட்டில் மனைவியின் ஓராண்டு திதியை எனது மகன் செய்துகொண்டிருந்தபோது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் எனது மகனைப் பிடித்து, மானிப்பாய் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
நாங்கள் மானிப்பாய் இராணுவ முகாமுக்கு சென்று அழுததன் பின்னர் மகனை, இராணுவத்தினர் விடுவித்தனர். மகனை அழைத்துக் கொண்டு, முகாமில் இருந்து 50 மீற்றர் தூரம் நடந்துவந்தபோது, வெள்ளைவானில் வந்தவர்கள் எங்களை அடித்து தள்ளிவிட்டு, மகனைக் கடத்திச் சென்றனர்.
இந்தச் சம்பவம் நடந்து 4 வருடங்கள் கழித்து, 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில், தொண்டைமானாறுப் பகுதிக்குச் சென்ற உறவினர் ஒருவர், இராணுவ முகாம் ஒன்றில் பதிவுகளை மேற்கொள்ளும் போது, அந்த இராணுவ முகாமில் இராணுவச் சீருடையுடன் எனது மகனைக் கண்டுள்ளார். எனது மகன் தங்களிடம் வெற்றிலை வாங்கித்தருமாறு கூறி தாங்கள் வாங்கிக் கொடுத்ததாகவும் எனக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, நான் அங்கு சென்று பார்த்த போது அங்கு மகன் இருக்கவில்லை.
இது நடந்து, இரண்டு வருடங்கள் கழித்து, நான் கதிர்காமம் சென்றேன். கதிர்காமம் செல்லும் வழியில் வவுனியாவில் ஒரு கடையில் நின்ற போது, அந்தக் கடைக்கு அருகில் வந்த இராணுவ ஜீப் ஒன்றில் இருந்து இராணுவத்தினர் இறங்கி பொருட்கள் வாங்கிச் சென்றனர். எதேச்சையாக ஜீப்பை பார்த்த போது, அதற்குள் இராணுவச் சீருடையுடன் எனது மகன் இருந்தார். நான் மகனை அழைத்த போது, ஜீப் புறப்பட்டுச் சென்றுவிட்டது’ என்றார்.
“ராமநாயக்க என்ற இராணுவ அதிகாரியே, கணவரைப் பிடித்தார்”
கச்சாய் இராணுவ முகாமைச் சேர்ந்த ராமநாயக்க என்ற அதிகாரி தலைமையிலான இராணுவத்தினரே எனது கணவரைப் பிடித்துச் சென்றனர் என காணாமற்போன வைத்திலிங்கம் மகேந்திரன் என்பவரின் மனைவி மகேந்திரம் சோமகலாவதி காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர், ‘2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி, தும்புத்தடிக்கு தடி வெட்டச் சென்ற எனது கணவரை இராணுவம் பிடித்துச் சென்றது. அவரை ஒரு வருடகாலம் வரணி முகாமில் வைத்திருந்தார்கள். அதன் பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எதுவும் தெரியாது’ என்றார்.
‘பாரிய படைத்தளத்திலிருந்து எவ்வாறு ஒருவர் தப்பிக்க முடியும்?’
கச்சாய் படைத்தளம், பாரிய படைமுகாமாக இருந்தது. அந்தப் படைத்தளத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்க முடியும்? கச்சாய் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேணல் சில்வா, தங்களை முட்டாளாக்கினார் என காணாமற்போன பொன்னுத்துரை மகாதேவனின் சகோதரரர் மனோகரன், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், சாட்சியமளித்தார்.
‘தென்மராட்சியை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர், வன்னியிலிருந்து வருபவர்கள் அருகிலுள்ள இராணுவ முகாமில் பதியவேண்டும் என்ற நடைமுறை வந்தது. 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி எனது சகோதரர் வன்னியில் இருந்து வந்து, இராணுவ முகாமுக்குப் பதியச் சென்றார்.
இதன்போது, இராணுவத்தினர் எனது சகோதரரைப் பிடித்தனர். நான் சென்று கேட்டபோது, பிற்பகல் 4 மணிக்கு சகோதரனை விடுவதாக அந்த முகாமுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரி கேணல் சில்வா கூறினார். 4 மணிக்குச் சென்ற போது, மறுநாள் விடுவதாகச் சொன்னார்கள். மறுநாள் சென்ற போது, அங்கு நின்ற புலனாய்வாளர்கள் மங்கள என்பவர், உங்கள் சகோதரன் முகாமில் இருந்து தப்பித்து புலிகளிடம் சென்றுவிட்டார் என்றார். ஆனால் தம்பி தப்பிக்கவில்லை.
பாரிய படைத்தளமாக அப்போது கச்சாய் இருந்தது. அங்கிருந்து எப்படி ஒருவர் தப்பிக்க முடியும்?. இது முட்டாள்களுக்கு சொல்லும் கதை. அதைத்தான் இராணுவம் எமக்குச் சொல்லியுள்ளது. கச்சாய் முகாமில் பொறுப்பதிகாரியாக இருந்த சில்வா 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா பூந்தோட்டம் முகாமில் அதிகாரியாக இருந்தார்’ என்றார்.
‘கணவரை இராணுவம் பிடித்ததை, உறவினர்கள் கண்டனர்’
ஏ – 9 பாதை மூடப்பட்டமையால் வன்னிப் பகுதியில் அகப்பட்ட எனது கணவரை, 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியன்று, இராணுவத்தினர் கைது செய்து அழைத்துச் செல்வதைக் கண்டதாக உறவினர்கள் தனக்குக் கூறியதாக, அவருடைய மனைவி குமணலதா, சாட்சியமளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
‘வேலை நிமித்தம், 2006ஆம் ஆண்டு வன்னிக்குச் சென்ற கணவர், ஏ-9 வீதி பூட்டப்பட்டமையால் அங்கு அகப்பட்டுக்கொண்டார். அவருடைய தாயார் அங்கு இருந்தமையால் அவருடன் இருந்தார். 2006ஆம் தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையில் என்னுடன் தொலைபேசி வழியாக தொடர்பில் இருந்தார். யுத்தம் காரணமாக அதன் பின்னர் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை.
யுத்தம் முடிந்த பின்னர் உறவினர்களிடம் விசாரித்ததில், கணவரின் தாயார் இறந்துவிட்டதாகவும் கணவரை இராணுவத்தினர் பிடித்ததாகவும் கூறினர். வவுனியா உள்ளிட்ட பல இடங்களிலுள்ள முகாம்களில் தேடியும் இன்றுவரையில் எனது கணவன் கிடைக்கவில்லை’ என்றார்.
சிகிச்சைக்காக கூட்டிச்சென்றவரை, ‘தப்பியோடிவிட்டார்’ என்றனர்
‘அடிகாயங்களுடன் காணப்பட்ட எனது சகோதரரை, நீதிமன்ற உத்தரவுக்கமைய சிகிச்சை வழங்குவதற்காக காங்கேசன்துறைக்கு கூட்டிச்சென்றவர்கள், அங்கு வைத்து அவர் தப்பியோடிவிட்டதாக, நீதிமன்றத்தில் பொய் கூறினர்’ என காணாமற்போன துஷ்யந்தன் என்பவரது சகோதரி, காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
‘2007ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதியன்று மாடு கட்டச்சென்ற எனது சகோதரனை இராணுவம் பிடித்தது. பின்னர், சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தது. புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார், ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ், அவரை நீதிமன்றத்திலும் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது, சகோதரனின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்டமையால் அவரை சிகிச்சைக்கு உட்படுத்துமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சிகிச்சை அளிப்பதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றவேளையில், சகோதரன் தப்பித்து விட்டதாக சாவகச்சேரி பொலிஸார் வழக்கை முடித்துவிட்டனர்.
மனித உரிமை ஆணைக்குழுவில் நாங்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வழக்கு, மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல் நீதிமன்றத்திலும், அதே கருத்தை பொலிஸார் சொல்லி வழக்கை முடித்துவிட்டனர்’ என அந்தச் சகோதரி தெரிவித்தார்.
சார்ள்ஸை விசாரித்தால் தகவல் கிடைக்கும்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பொறுப்பாளராக 2006ஆம், 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த சார்ள்ஸ் என்பவரை விசாரணை செய்தால், காணாமற்போனோர் தொடர்பில் பல உண்மைகள் தெரியவரும் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், மக்கள் கூறினர்.
தந்தையொருவர் சாட்சியமளிக்கையில்,
மகன் காணாமற்போனமை தொடர்பில் ஈ.பி.டி.பி அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கு ஈ.பி.டி.பி யைச் சேர்ந்த சார்ள்ஸை நான் சந்தித்தேன்.
இதன்போது, ‘உங்கள் மகனா அவர்?, இராணுவ முகாமில் அவனை நான் தான் விசாரித்தேன்’ என எனக்கு கூறினார்.
இதனடிப்படையில், தென்மராட்சியில் காணாமற்போனவர்கள் தொடர்பில் சாள்ஸுக்கு முழு விபரமும் தெரிந்திருக்கும்.
அவரிடம் விசாரணை செய்தால் காணாமற்போனோர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் என்றார்.
‘சுடுவதற்கு வந்தவர்களை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கண்டேன்’
என்னைச் சுடுவதற்கு வந்தவர்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஸ்ரீதர் தியேட்டர் அலுவலகத்தில் கண்டதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், மட்டுவிலைச் சேர்ந்த காணாமற்போன ஒருவரின் தந்தை சாட்சியமளித்தார்.
“என்னைச் சுடுவதற்கு திரிந்தவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்குச் சென்றேன். அப்போது, நான் வீட்டில் இல்லாத போது என்னைச் சுட வந்தவர்கள் அங்கு நிற்பதாக எனது மனைவி எனக்கு கூறினார்.
நான் ‘அவர்களை பார்க்காமல் வா’ என மனைவிக்கு கூறி, அலுவலகத்துக்குள் சென்றேன்” என்றார்.
மகனைக் கடத்தியவர்கள் என்னையும் சுடத்திரிந்தனர்
தாய்க்கு சமஹன் வாங்க கடைக்குச் சென்ற எனது மகன் உதயசேகரன் மோகரதனை (காணாமற்போகும் போது வயது 19) கடத்தியவர்கள் அதன் பின்னர் என்னையும் சுடுவதற்கு வீடு வரையில் வந்தனர் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், மட்டுவில் பகுதியைச் சேர்ந்த உதயசேகரன் என்பவர் சாட்சியமளித்தார்.
“2006ஆம் ஆண்ட ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி எனது மகன் கடைக்குச் சென்ற போது, காணாமற்போனார். தொடர்ந்து அதே மாதம் 11ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு எமது வீட்டுக்கு பவள் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
என்னைப் பிடித்து இழுத்துச் சென்று, ஆயுதங்கள் புதைத்து வைத்திருக்கின்றாய் எடுத்துத்தா என்றனர். உடனே அதில் நின்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் பவள் வாகனம் வரையில் ஓடிச்சென்றுவிட்டு, மீண்டும் திரும்பி வந்து, ஒரு இடத்தைக் காட்டி அதை தோண்டுமாறு கூறினார்.
அதை நான் தோண்டியபோது, அங்கு ஒன்றும் இல்லை. மீண்டும் அந்தச் சிப்பாய் பவள் வாகனம் வரையில் சென்றுவிட்டு, பிறிதொரு இடத்தை தோண்டுமாறு கூறினார். அங்கு தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை.
பிற்பகல் 6 மணியளவில் அங்கு நின்ற இராணுவத்தினரின் வயலஸ்கள் அனைத்தும் ஒலித்தன.
அனைவரும் உடனே கூடிச் சென்று பவள் வாகனத்தில் ஏறினர். அன்று 6 மணிக்குத் தான் 3 ஆம் ஈழப்போர் ஆரம்பமானது.
தொடர்ந்து நாங்கள் மகனைத் தேடவில்லை. பொலிஸில் நம்பிக்கையின்மையால் அங்கு முறைப்படு செய்யவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவில் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தோம்.
இதேவேளை, என்னை கொடிகாமம் சிவில் அலுவலகத்துக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை கையெழுத்திட வரச்சொல்லி, நான் சென்று வந்தேன். இப்படிப் போய் வந்தமையால் மனம் பாதிக்கப்பட்ட நான், ‘புலி என்றால் என்னைச் சுடு, ஆதாரம் இருந்தால் வழக்குத் தொடர்’ என சிவில் அலுவலகத்தில் இருந்த இராணுவத்தினரிடம் கூறினேன்.
‘நீ இப்போது போ, அதற்கு நாள் இருக்கின்றது’ என அங்கிருந்த இராணுவத்தினர் கூறினர். அடுத்து சில நாட்களில், ‘உனக்கு விசாரணை முடிந்துவிட்டது. இனி நீ இங்கு வரத் தேவையில்லை’ என அங்கிருந்த இராணுவத்தினர் எனக்கு கூறினர்.
அதன் பின்னர் எனக்கு பயம் தொற்றியது. ஏனெனில் கொடிகாமம் சிவில் அலுவலகத்தில், ‘விசாரணை முடிந்தது’ என்று ஒருவரை பார்த்துக் கூறினால், குறைந்தது ஒரு வாரத்துக்குள் அவரைச் சுட்டுக்கொன்றுவிடுவார்கள்.
இதனை ஊகித்துக்கொண்ட நான் உறவினர் வீடுகளில் மறைந்து வாழத் தொடங்கினேன். இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி, எனது வீட்டுக்கு மூவர் பிஸ்டலுடன் வந்தார்கள். நான் வீட்டுக்கு பின்புறத்திலுள்ள தோட்டத்தில் நின்றிருந்தேன்.
நான் வீட்டில் இல்லையென எனது மனைவி அவர்களுக்கு கூறினார். அவர்கள் வீட்டுக்குள் தேடி திரிந்துவிட்டுச் சென்றனர்.
அவர்கள் சென்றதும் வீட்டுக்கு வந்த நான், வேறு இடத்துக்கு மாறுவதற்கு எண்ணினேன். வீதியைக் கடக்க நோட்டம் பார்க்க ஆட்களை அனுப்பி வீதியைக் கடந்தேன். நான் வீதியைக் கடக்கும் போது, என்னை ஒரு இராணுவ சிப்பாய் கண்டு, பெயர் சொல்லி அழைத்தான். நான் அதைக் கவனிக்காமல் தப்பித்து, மறைவாக வாழ்ந்தேன் என்றார்.
3 மாதக்குழந்தையுடன் சென்று கெஞ்சியபோது சுடுவோம் என்று படையினர் மிரட்டினர்!
வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற கணவரைப் பிடித்த படையினர் இன்னும் ஒப்படைக்கவில்லை. தேடிச் சென்ற என்னையும் பல்வேறு சித்திரவதை செய்தனர் என்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் மிருசுவிலைச் சேர்ந்த இளம் பெண் கதறியழுதவாறு சாட்சியமளித்தார்.
24 வயது இளம் குடும்பப் பெண் சாட்சியமளிக்கையில் மேலும் தெரிவித்ததாவது-
“கடந்த 2006 ஆகஸ்ட் 13 ஆம் திகதி மிருசுவில் உசன் பகுதியில் வசித்த எங்களுக்கு மூன்று மாதக் கைக்குழந்தை இருந்தது. எனது கணவர் “வான் “சாரதியாக பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்து கணவர் வீட்டுக்கு வந்ததும் சில பொருட்கள் வாங்கி வருமாறு கடைக்கு அவரை அனுப்பியிருந்தேன். பத்து நிமிடத்தில் சைகிளில் செல்லும் தூரத்திலே கடை இருந்தது. ஊரடங்கு நேரம் ஆரம்பித்துள்ளதால் விரைவில் வருமாறு அனுப்பியிருந்தேன். சிறிது நேரத்தில் வந்த அயலவர்கள் எனது கணவரைப் படையினர் பிடித்து வைத்திருப்பதாகக் கூறியதால் மூன்று மாதக் கைக்குழந்தையுடன் படையினரின் உசன் முகாமுக்குச் சென்றேன்.
கணவரின் கைகளைக் கட்டிய நிலையில் படையினர் அவரை அழைத்துச் செல்வதைக் கண்ட நான் அங்குள்ளவர்களிடம் எனது கணவரை விடுமாறு குழந்தையுடன் கெஞ்சினேன். அதற்கு அவர்கள் தற்போது ஊரடங்கு நேரம் ஆரம்பித்துவிட்டது உடனடியாக இங்கிருந்து சென்று விடு இல்லையேல் சுட்டு விடுவோம் என்றும், நாளை காலை கச்சாயில் உள்ள முகாமுக்கு வருமாறும் கூறினர். மறுநாள் கச்சாய் முகாமுக்குச் சென்று விசாரித்தபோது எனது கணவரை தாங்கள் பிடிக்கவில்லை என படையினர் என்னிடம் கூறினர்.
மறுநாள் எனது வீட்டுக்கு வந்த படையினர் வீட்டைச் சோதனையிட வேண்டுமெனக்கூறி என்னை வீட்டுக்குள் வருமாறு கூறினர். நான் அச்சம் காரணமாக வீட்டுக்குள் செல்லாததால் வீட்டைச் சோதனையிட்ட பின்னர் எனது தேசிய அடையாள அடடையை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். முகாமுக்குச் சென்றால் அங்கு விசாரணை என்ற போர்வையில் “பிளேட்டினால் “வெட்டியும் “அயன்பொக்ஸினால் “சுட்டும் சித்திரவதை செய்வார்கள் என அறிந்ததால் நான் முகாமுக்கு செல்லாமல் பக்கத்து வீட்டில் தஞ்சமடைந்திருந்தேன். இரு தினங்களின் பின்னர் தேடி வந்த படையினர் எனது வீட்டில் ஆட்கள் இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரரை அச்சுறுத்தி என்னை வெளியே விடுமாறு கத்தினர்.
அந்த வீடடில் உள்ளவர்களும் அச்சம் காரணமாக என்னை வெளியே வருமாறு கூறிய போதிலும் என்னைப் படையினர் அழைத்துச் செல்லஅவர்கள் விடவில்லை. இதனால் வேறு வீட்டில் தஞ்சமடைந்தேன். தொடர்ந்து படையினர் கச்சாய் முகாமுக்கு வருமாறு நான் இருக்கும் வீடுகளுக்கு வந்து என்னை அச்சுறுத்திய வண்ணமிருந்தனர். உறவினர்களின் வேண்டுகோளின் பிரகாரம் கச்சாய் படை முகாமுக்குச் சென்ற வேளையில் தனி அறையில் 25 இற்கு மேற்பட்ட படையினர் துருவித் துருவிக் என்னைக் கேள்விகள் கேட்டனர்.
நான் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். திடீரென விளக்குகளை அணைத்துவிட்டு அங்கே வந்த ஒரு படை அதிகாரி உண்மையைச் சொல்லிவிடு இல்லையேல் சுட்டுவிடுவோம் என அச்சுறுத்தினார். நான் துணிந்து பதில் சொன்னேன். அவ்வேளையில் பிள்ளை அழுததால் என்னை வெளியே விட்டுவிட்டனர்.” என்று குறிப்பிட்டார்.