பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் ; யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை உடனடியாகவே விடுவிக்கப்படவேண்டுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

குறித்த பயிற்சிக் கலாசாலை தற்காலிகமாக இயங்குவதற்கு வேறு இடத்தில் இடஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தீர்மானமும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பலாலி ஆசிரிய கலாசாலை அதிபரினால் பின்வரும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது, பலாலி ஆசிரிய கலாசாலை 1947 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 16 ஆம் திகதி பலாலி இராணுவ முகாமுக்கு அருகாமையில் 59 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டது. பின்னர் 1986ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 03 ஆம் திகதி ஏற்பட்ட இராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து பல இடங்களில் கலாசாலை இயங்கி வந்த நிலையில் தற்போது திருநெல்வேலி முத்துத்தம்பி ஆரம்பப் பாடசாலையில் அநாதரவான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இங்கு ஆரம்பத்தில் 13 துறைகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டபோதும் தற்போது அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் நிர்வாக ரீதியாக 2 பணியாளர்களுடன் இயக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார்.

இதன்போது குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், வலி வடக்கிலுள்ள பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை உடனடியாக இராணுவத் தரப்பினரால் விடுவிக்கப்படவேண்டும்.

அத்துடன் குறித்த கலாசாலை தற்காலிகமாக வேறொரு இடத்தில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கபடவேண்டும் என இரண்டு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து இணைத் தலைவர்களின் ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த கலாசாலையின் காணி விடுவிப்பானது மத்திய அரசின் கொள்கைத் திட்டமிடலில் உள்ளமையால் அது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான நடவடிக்கையை நாங்கள் விரைந்து எடுப்போம். அதுவரை கலாசாலை தற்காலிகமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் கல்வி, சிறுவர் மற்றும் அபிவிருத்தி, மின் விநியோகம், வர்த்தகம் தொழிற்றுறை, வீடமைப்பு, அனர்த்த முகாமைத்துவம், போக்குவரத்து, உள்ளுராட்சி சபைகள், நகர அபிவிருத்தி, அதிகார சபைகள் , தொல்பொருளியல் திணைக்களம், நிர்வாகம் என 11 விடயங்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உட்பட வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச செயலக செயலர்கள், அலுவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts