பனை அபிவிருத்தி சபையினால் இது வரைக்கும் நிர்வகிக்கப்பட்டு வந்த திக்கம் வடிசாலையை மீண்டும் வடமராட்சி கூட்டுறவு சங்கத்தின் கொத்தணிக்கு மீண்டும் பாரப்படுத்துவதாக நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் கூடிய அமைச்சரவையின் பொருளாதார உபகுழு தெரிவித்துள்ளது.
ஊழியர்கள், மற்றும் கூட்டுறவு சங்கத்தினர் கடந்த 13ஆம் திகதி நெல்லியடியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைச் சந்தித்து இதற்கான விண்ணப்பத்தை செய்திருந்தனர். அதை தொடர்ந்து கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாவும் சுமந்திரனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
இந்த வேண்டுகோளை பரிசீலிப்பதற்கான கூட்டத்திற்கு இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்தில் இந்தவிடயம் ஆராயப்பட்டு இம்மாற்றம் உடனடியாக செய்யப்படும் என்றும் சென்ற வருடம் ஊழியர்களின் நிலுவைக் கொடுப்பனவுக்கென்று அனுப்பப்பட்ட பணம் தாமதமின்றி அவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணி வடிசாலையின் உரிமைத்துவத்தை பொறுப்பேற்றவுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அதனை நவீனப்படுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.