ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் இருவரும், அரச தரப்பு சாட்சிகளாக மாறிவிட்டனர்.
காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் இருவரே, இவ்வாறு அரச தரப்பு சாட்சிகளாக மாறிவிட்டனர்.
அவ்விருவரும், ஹோமாக நீதிமன்ற நீதவான ரங்க திஸாநாயக்கவின் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவ்விருவரும், நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து இரகசிய வாக்குமூலமளித்தனர்.
திருகோணமலை குச்சவெளி மற்றும் மட்டக்களப்பு கல்லடி ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களே இவ்வாறு சாட்சியமளித்துள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள், மேற்குறிப்பிட்ட தமிழர்கள் இருவரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, தங்களுக்கு சிம்காட்களை பெற்றுக்கொண்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.