அனுமதி பத்திரம் வழங்குவதற்குரிய அதிகாரம் மாகாண போக்குவரத்து அதிகார சபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கே உள்ளது. ஆனால், இலங்கையில் எந்த இடத்திலும் இல்லாதவாறு யாழ். மாவட்டத்தில் மாத்திரம் மாவட்டச் செயலாளர் அவ் அதிகாரத்தை தன் கையில் வைத்துள்ளார். முறையற்ற விதத்தில் தனியார் பஸ்களுக்கு வழங்கப்படும் வழி அனுமதிப்பத்திரமே இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணம் என யாழ். சாலை முகாமையாளர் என்.குணபாலசெல்வம் தெரிவித்தார்.
நேற்றயதினம் கோண்டாவில் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடாகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலங்களில் போக்குவரத்து பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் இருந்து இன்று வரை 63 பஸ்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நிரந்த அனுமதிபத்திரம் உள்ள பஸ்களுக்கு மட்டுமே தற்காலிக வழி அனுமதிபத்திரம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், நிரந்தர அனுமதிபத்திரம் இல்லாத பஸ்களுக்கு ஒருநாள் என்ற அடிப்படையில் வழங்கப்படும் அனுமதிபத்திரம் மாவட்டச் செயலாளரால் மாதம் முழுவதும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு சீரற்ற முறையில் வழங்கப்படும் அனுமதிபத்திரம் காரணமாக சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகளே போக்குவரத்து சபை பஸ்ஸூடன் முரண்படுகின்றனர்.
அனைத்து தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ரீதியில் வழங்கப்படும் இவ்வழி அனுமதிபத்திரத்தால் பயணிகளே அதிகம் பாதிக்கின்றனர். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதிகள் வழங்கியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என தெரிவித்தார்.