முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தமக்கான வேலைவாய்ப்பைப் பெறுவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவன தலைவர் மு.சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும், இவர்கள் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 12000 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவுசெய்து அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுள் அதிகமானோர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,
இவர்களுள் 3000பேர் மாத்திரமே நிரந்தர தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும், அதிகமானோர் பொலிஸாரின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய வேலைவாய்ப்பற்றோரின் வீதமானது 2.3 வீதமாகவும் கிளிநொச்சியில் வேலைவாய்ப்பற்றோர் 7.6 வீதமாக காணப்படுவதாகவும் தேசிய புள்ளிவிபர தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை மேம்படுத்த வேண்டும் என துறைசார் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுத்திட்டங்களில் இராணுவ சிப்பாய்களையே முன்னைய அரசு உள்வாங்கியதாகவும், உள்ளூர் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தொழில் வாய்ப்பைப் பெறுவதை திட்டமிட்டு தட்டிக்கழிக்கின்ற மூலோபாயமாகவே இதனை நோக்குவதாகவும் சர்வானந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் போராளிக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மறுப்பு
முன்னாள் போராளி என்ற காரணத்தால் நிரந்தவேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்காலிக புகையிரத கடவை காப்பாளராக பணியாற்றி வருவதாக வவுனியா புளியங்குளத்தில் வசிக்கும் பொன்னுச்சாமி கஜந்தன் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்றபோது ஓமந்தைப் பகுதியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட இவர், இரண்டரை வருடங்களின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
2012ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இவர் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் உணவுத்தேவைக்காக புகையிரத கடவைக்காப்பாளராக கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிகமாக கடமையாற்றி வருகின்றபோதிலும், தொழில் உத்தரவாதமின்றி தற்காலிக வேலையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்காலிக புகையிரத கடவைக்காப்பாளர் தொழிலை நிரந்தரமாக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தனக்கு புகைப்பட துறையில் அனுபவமிருந்தும் அதற்கான பொருளாதார வசதிகள் இன்மையால் தனக்கு தெரிந்த தொழிலை ஆரம்பிக்க முடியாமல் தவித்துவரும் நிலையில்,
இந்த முன்னாள் போராளி அரசினால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட கடன் திட்டங்கள் வழங்கப்படுமாக இருந்தால் தனது தொழிலை செய்து போதுமான வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.