நலன்புரி முகாம்களில் இளவயது கர்ப்பம் அதிகரிப்பு

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நலன்புரி முகாம்களில் இளவயது திருமணம் மற்றும் இளவயது கர்ப்பம் என்பன அதிகரித்துக் காணப்படுவதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமைகளின் கீழ், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்,இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நலன்புரி முகாம்கள் சுகாதாரச் சீர்கேடான முறையில் இருக்கின்றன. 20 பேருக்கு ஒரு மலசலகூடம் என்ற அடிப்படையில்தான் மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முகாமில் நெருக்கடியாக வீடுகள் அமையப்பெற்றிருப்பதால் வயிற்றோட்டம், வாந்திபேதி உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன.

இதேவேளை, முகாம்களில் உள்ள குழந்தைகளில் பல குழந்தைகளுக்கு போசாக்கு நிலை மோசமாகவுள்ளது. எனது பிரிவில் 285 குழந்தைகள் போசாக்கு குறைந்த குழந்தைகளாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 6 மாத காலத்துக்கு போசாக்கு மட்டத்தை உயர்த்துவதற்கு மாதாந்தம் 3 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது என்றார்.

தொடர்புடைய செய்தி

மலக்கழிவுகளால் நாறும் கீரிமலை

Related Posts