குருநகரில் 10 வயதுச் சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

சகோதரனுடன் கடலில் விளையாடிய சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தொடர்மாடி குருநகரைச் சேர்ந்த குருநகர் சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்கும் ரூபன் அன்ரனி பேட் கீர்த்தனன் (வயது 10) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

தொடர்மாடி, குருநகரைச் சேர்ந்த 10 வயது 08 வயது சிறுவர்கள் மதியம் தமது வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகில் ஏறி கடலில் குதிப்பதும் படகில் ஏறுவதுமாக தமையன் விளையாட தம்பியார் படகில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

கடலில் இரண்டு அடி தண்ணீர் இருந்தாகவும் திடீரென கடல் பெருக்கெடுத்து கடலில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடலில் குதித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

படகில் இருந்த தம்பியார் அழுவதை அவதானித்த தந்தை அவனிடம் விசாரித்த போது அவன் நடந்த சம்பவதை கூறியுள்ளான். கடலில் தேடி சடலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டது.

Related Posts