Ad Widget

யாழில் 39,300 வீடுகள், 32,017 மலசலகூடங்கள், 13,711 கிணறுகள் தேவை

யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முழுமையாக 39,300 புதிய வீடுகளும், 32,017 மலசல கூடங்களும், 13,711 குடிநீர் பெறும் கிணறுகளும் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான நகரத்திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்கள், மீள்குடியேறவுள்ள மக்கள், நலிவடைந்த மக்கள், மற்றும் பொதுவாக அமைக்கப்பட வேண்டியுள்ள வீடுகள், மலசலகூடங்கள், நீர் வசதிகள் தொடர்பான மதிப்பீட்டு தரவுகளில் இது குறித்துக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்காக 14,391 புதிய நிரந்தர வீடுகளும், பகுதியளவு திருத்த வேலைப்பாடுகளுடன் 3,512 வீடுகளும் அமைக்கப்பட வேண்டியுள்ளது. 11,329 புதிய மலசலகூடங்களும், விசேடதேவைகளுடன் கூடிய 412 மலசல கூடங்களும், திருத்த வேலைப்பாடுகள் அடங்கிய 1,670 மலசலகூடங்களும் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

அத்துடன் 5,235 கிணறுகளும், 1,667 குழாய்க் கிணறுகளும், திருத்த வேலைப்பாட்டுடன் கூடிய 376 கிணறுகளும் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

இதேவேளை இன்னமும் மீள்குடியமர்த்தப்படாத மக்களுக்கான நிவர்த்தி சேர் தேவைகளில் 9,457 புதிய வீடுகளும், 9,254 புதிய மலசல கூடங்களும், விசேட மற்றும் திருத்த வேலைகளுடன் கூடிய 18 மலசலகூடங்களும், 109 புதிய கிணறுகளும், 69 குழாய்க் கிணறுகளும், 3,927 புனரமைப்பு செய்யப்பட வேண்டிய கிணறுகளும் உள்ளடங்கியுள்ளன.

நலிவடைந்த மக்களுக்காகப் புதிதாக அமைக்கப்பட வேண்டியனவாக 15,452 வீடுகளும், பகுதியளவு திருத்த வேலைப்பாட்டுடன் கூடிய 5,243 வீடுகளும், புதிதாக அமைக்கப்பட வேண்டிய 11,434 மலசல கூடங்களும், விசேடமாக அமைக்கப்பட வேண்டிய 134 மலசல கூடங்களும், திருத்த வேலைப்பாடுகள் நிறைந்த 968 மலசல கூடங்களும் காணப்படுவதுடன், புதிதாக அமைக்கப்பட வேண்டிய மற்றும் திருத்த வேலைப்பாடுகளுடன் கூடிய 11,129 கிணறுகளும் அமைக்கப்படவேண்டிய தேவையுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைவிடப் பொதுவான தேவைகளுக்காக 168 புதிய மலசல கூடங்களும், 36 திருத்தப்பட வேண்டிய மலசலகூடங்களும், 203 புதிய கிணறுகளும், தேவையாக உள்ளதுடன் 295 கிணறுகள் திருத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

Related Posts