மேலதிகாரிகள் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவே அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிய வருகிறது.
இதனடிப்படையில் அப்படை முகாமின் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் பணியாற்றிய கே.ஜெயதிலக (வயது 21) என்ற சிப்பாய் கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவரது தற்கொலைக்குக் காரணம் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தனது சகோதரனின் தற்கொலைக்கு தம்முடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுமாறு மேலதிகாரிகள் கொடுத்த தொல்லையே காரணம் என இறந்த சிப்பாயின் சகோதரி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்த பொலிஸார் அப்படைமுகாமில் பணியாற்றும் அதிகாரி ஒருவரைக் கைது செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தினர்.
அவரை எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.