“காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் எனது குழுவினர் போன்று சிறப்பாகச் செயற்பட்டவர்கள் எவரும் இல்லை.” இப்படித் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம.
காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
அத்துடன் இதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பிய அவர் இக்குழுவைக் கலைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“எங்கள் செயற்பாட்டில் நாங்கள் வெளிப்படைத் தன்மையுடனேயே செயற்பட்டோம். மக்கள் வாக்குமூலங்களை வழங்கும் போது, இராணுவத்தினரோ அல்லது பொலிஸ் அதிகாரிகளோ அந்த அறைகளுக்குள் இருக்கவில்லை.” “நாம் விசாரணைக்கு 300 பேருக்கு அழைப்பு விடுத்தால் ஆயிரம் பேர் வந்திருப்பர். இதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பே காரணம்.
இதனால் நாம் அவர்களில் ஒருவரேயேனும் திருப்பி அனுப்பியதில்லை. அத்துடன் கலந்துகொண்டவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம்.
முறைப்பாட்டாளர்களின் முறைப்பாடுகள் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற, புலனாய்வு செய்யும் அணியினரை அவர்களது வீடுகளுக்கு அனுப்பினோம்.
அவர்களுடைய முறைப்பாடுகளின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு எழுதியனுப்பினோம். புனர்வாழ்வு விடயம் தொடர்பாகவும் நாங்கள் கேட்டறிந்ததோடு, அதிகாரிகளது பதில்கள் தாமதமானவையாகவோ அல்லது முறையானவையாகவோ இல்லாதவிடுத்து, அதற்கு நடவடிக்கை எடுத்தோம்”
“இதை விட நாம் என்ன செய்ய முடியும்? எம்மை விடச் சிறந்த பணியை, வேறு எவரும் செய்ய முடியும். எங்களுடைய பணியின் பாரியளவிலான தன்மை குறித்து மக்கள் உணர வேண்டும். முடிவுகளைக் காண்பிப்பதற்கு, காலமெடுக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
