Ad Widget

கண்ணீர்க் குளமானது நாகர்கோவில்

நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 22ம் திகதி இலங்கை விமானப்படையின் கோரக்குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 21 பாடசாலைச் சிறார்களின் நினைவுதினம் நேற்று பெற்றோர்கள்,உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் பலியான மாணவர்களின் நினைவாக நிறுவபட்ட நினைவுத்தூபியும் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நினைவுத்தூபியினை நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்.

நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டு வீச்சு தாக்குதலில் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 21 மாணவ மாணவிகள் படுகொலையானார்கள். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்கள்.

குறித்த நினைவு தூபியை திறந்து வைத்ததன் பின்னர் வடக்கு முதல்வர் உரையாற்றுகையில்,

எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்

இன்று ஒரு துன்பகரமான தினம். இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாடசாலையில் நடைபெற்ற துன்ப நிகழ்வுகளின் வடுக்கள் இன்னமும் நீங்காத நிலையில் பலர் வாடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.

இந்த நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்விற்கு என்னை கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் திரு.சுகிர்தன் அவர்கள் அழைத்திருந்தார்கள். இந்த சிரார்த்த தினத்தில் இப்பாடசாலைக்கு வருவதற்குக் கால்கள் பின்னடித்தன.

உங்கள் சோகக் கதைகள் மனதை வாட்டுகின்றன. என்றாலும் பறிகொடுத்த நெஞ்சங்களுக்குப் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறலாம் என்றே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உடனே முடிவெடுத்தேன்.

இத்துயர சம்பவம் எங்கள் அனைவரதும் இரத்தங்களை உறைய வைத்தது. அழகிய வண்ணாத்திப்பூச்சிகள் போல அங்குமிங்கும் பறந்து திரிந்த இக்குழந்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் தசைக்குவியல்களாய் தரையில் இறைத்து விட்டுச் சென்றன இந்தப் புக்காரா விமானங்கள்.

எம் மக்களை கடந்த கால அதிர்ச்சிகள் எந்த அளவுக்குப் பாதித்திருக்கின்றன என்பதை நாங்கள் இதுவரையில் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தறிய முற்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளை எமது பல்கலைக்கழகமும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தாரும் சம்பந்தப்பட்ட வைத்தியர் குழாமும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

போரானது ஒன்றுமே அறியாத 21 பிள்ளைகளை காவு கொண்டமை எம் மனதைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றது. இந்தப் பிள்ளைகளின் பெற்றோரை எப்படி ஆறுதல்ப்படுத்துவது என்று புரியவில்லை. இப் பிள்ளைகள் அகாலத்தில் இறந்து சில நாட்கள் வரையில் இப் பாடசாலையைச் சூழவுள்ள பகுதிகளில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் கேட்டதாகவுங் கூறப்படுகின்றது.

இம் மண்ணில் பிறந்த அனைவரும் என்றோ ஒரு நாள் இறப்பதென்பது மாற்ற முடியாததொன்று. எனினும் பூவும் பிஞ்சுமாக இடையில் அறுந்து செல்வதென்பது மனவிரக்தியை எமக்கு ஏற்படுத்துகின்றது.

ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். கர்ம வினைப்படி பார்த்தால் அகால மரணமடைந்த குழந்தைகள் தமது உலக சீவியத்தை முடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள். பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் அவர்களின் பெற்றோரும் உற்றார் உறவினருமே.

எமது கர்மவினை தான் எம்மை வாட்டுகின்றன. அப்பிள்ளைகள் இன்று உயிருடன் இருப்பார்களேயாயின் அவர்கள் இளைஞர்களாகவும் யுவதிகளாகவும் இந்த மண்ணில் உலாவி வருவதை காணக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் எமது சிந்தனையில் அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.

அவர்களை நாம் மறந்திருந்தால்த்தானே மீள நினைப்பதற்கு! அல்லவா? ஆனால் அவர்கள் இறந்ததால்த்தான் இன்று உலகம் பூராகவும் எமது நிலை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது! எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது என்றார்.

சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சி செய்த காலப்பகுதியிலேயே 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் நாள் நகர்கோவில் மகா வித்தியாலயம் மீது நடத்தப்பட்ட விமான குண்டுத்தாக்குதலில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

nakar-kovil-students-1

nakar-kovil-students-2

nakar-kovil-students-3

nakar-kovil-students-4

Related Posts