யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (22) இரவு தொடக்கம் நாளை புதன்கிழமை (23) வரையில் கடலுக்குச் செல்லாமல் தவிர்ப்பதன் காரணமாக நாளை புதன்கிழமை (23) யாழ்ப்பாணச் சந்தைகளில் மீன் வரத்து இருக்காது.
வடபகுதி கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கண்டித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து போராட்டமொன்றை நாளை புதன்கிழமை (23) மேற்கொள்ளவுள்ளன.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என மேற்படி அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நாளை சந்தைகளில் மீன் வரத்து இருக்காது என்பதற்காக மீன் விற்பனையாளர்கள் சந்தைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நாளைக்குத் தேவையான மீன்களையும் இன்றே வாங்கிச் செல்லுங்கள் எனக்கூறிவருகின்றனர்.