இளம் சமுதாயத்தினரே அதிகமாக நஞ்சருந்துகின்றனர்

தற்கொலைக்காக நஞ்சருந்துதல் தற்போது அதிகமாகியுள்ளது. அதிலும் இளம் சமுதாயத்தினர் நஞ்சருந்துதல் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்களின்படி தெரியவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை உளவள வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.சிவயோகன் தெரிவித்தார்.

நச்சுத்தன்மையுள்ள வீட்டுப் பாவனைப் பொருட்களால் அநாவசியமாக ஏற்படுத்தும் விபத்துக்களை தடுப்போம் என்ற தொனிப்பொருளில், தேசிய விஷ ஒழிப்புத்தினம் இம்மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை (17) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

‘இளம் சமுதாயத்தினர் அதிக மன அழுத்தம் காரணமாக நஞ்சருந்துகின்றனர். தங்களின் பிரச்சினைகளை பிறரிடம் பகிர்ந்து கொண்டால் தன்னுடைய தனிப்பட்ட விடயங்கள் வெளியில் திரிந்துவிடும் என்பதால் அதனை தமக்குள் வைத்திருந்து, அதிகரித்த மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். அந்நேரத்தில் வாழ்வதைவிட சாவதே மேல் என்ற முடிவுக்கு வருகின்றனர். தங்கள் பிரச்சினை வெளியில் சொல்லும் வழியாகவும் தற்கொலை முயற்சியை இளம்சமுதாயத்தினர் மேற்கொள்கின்றனர். இது தவறான விடயம். இந்த மார்க்கத்தை இளம் சமுதாயத்தினர் மேற்கொள்ளக்கூடாது.

மனஅழுத்தம், கோபம், உறவுகள் சார்ந்த பிரச்சினை, கல்வி மற்றும் வீட்டுப் பிரச்சினை என்பன தற்கொலைக்குத் தூண்டுகின்றன. இது தொடர்பில் இளம்சமுதாயத்தினருக்கு போதிய விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 8 இடங்களில் மனநிலை சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் சிகிச்சை நிலையங்கள் (கவுண்சிலிங்) இருக்கின்றன. அங்கு வருபவர்களின் எண்ணிக்கையானது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts