யாழில் குடிநீர் போத்தல்களின் விற்பனை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் போத்தல்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

சுன்னாகம் பகுதியிலுள்ள மின்சார சபையின் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணமாக, வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் கடந்த காலங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனால் அப்பகுதியிலுள்ள கிணறுகளின் நீரைப் பொதுமக்கள் பருகமுடியாத நிலை ஏற்பட்டதுடன், மக்களுக்கான குடிநீரை பிரதேச சபைகள், மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு என்பன வழங்கின.

எனினும், மக்கள் அந்நீரை உணவு சமைப்பதற்கான தேவைக்கு பயன்படுத்தியதுடன் குடிநீர் தேவைக்காக போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்ளத் தொடங்கினர். இதனால் போத்தல் நீருக்கான கேள்விகள் அதிகரித்துள்ளது.

போத்தலில் அடைத்த குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்களும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தன.

யாழ்ப்பாணத்தில் வைத்து போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை உற்பத்தி செய்வதற்கு சில நிறுவனங்கள் யாழ். மாவட்டச் செயலகத்தில் அனுமதி கோரியபோதும், அதனை முன்னாள் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மறுத்திருந்தார். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்பதால் அவ்வாறாதொரு அனுமதியை வழங்க முடியாது எனக்கூறியிருந்தார்.

இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் (சுத்திகரிக்கப்படும்) குடிநீர் போத்தல்களில் அடைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு விற்பனைக்கு வருகின்றது.

யுத்தகாலத்தில் அனைத்து பலசரக்குக் கடைகளிலும் ‘5 இலட்சம் குளிசை’ விற்பனைக்கு இருந்தமையைப் போல தற்போது, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்குப் பகுதி கடலில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை யாழ்ப்பாணத்துக்கு வழங்கும் திட்டத்தை வடமாகாண சபை நடைமுறைப்படுத்தும் வரையில், குடிநீர் போத்தலுக்கான கேள்வி யாழ்ப்பாணத்தில் அதிகரித்துக் காணப்படும்.

Related Posts