2005ம் ஆண்டு தமிழர்கள் வாக்களிக்காதிருக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பணம் கோரியதாகவும் எனினும் தான் வழங்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்று டி.வி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் 200 மில்லியன்களையும் பின்னர் பிரிதொரு நிறுவனத்தின் ஊடாக 2000 மில்லியன்களையும் இவ்வாறு வழங்கியதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் வழங்கியமைக்கு ஒப்பந்தமாக முன்வைக்கப்பட்டது ராஜபக்ஷ குடும்பத்தின் எவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்றே என இங்கு குறிப்பிட்ட அவர் குறித்த ஒப்பந்தம் 2006ம் ஆண்டு கோட்டாபய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருந்ததாகவும், அதன் தலைவர்கள் பிளவுபட்டிருந்ததாகவும் அப்போது புலிகளை அழித்திருந்தால் இரண்டு பக்கமும் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும் எனவும் பிரதமர் இந்த நிகழ்ச்சியின் போது சுட்டிக்காட்டினார்.
எனினும் இந்தக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
தற்போதும் விடுதலைப் புலிகளிடம் இருந்த தங்கம், கப்பல் போன்றன கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது கேபி மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டார்.
கேபி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மறுபுறம் இந்திய அரசும் அவரைக் கோரி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரணில், ஐக்கிய தேசியக் கட்சி தனது சொத்து அல்ல எனவும், தனக்கு பின்னால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் யார் என்பதை கட்சியினாலேயே தீர்மானிக்கப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டதாக வௌியான குற்றச்சாட்டு குறித்து வினவியபோது,
நீக்கப்பட்டது சம்பூர் முகாம் மட்டுமே எனவும் அவற்றையும் நீக்க வேண்டி ஏற்பட்டது மஹிந்த தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதியினாலேயே எனவும் குறிப்பிட்டார்.
மேலும் சம்பூரின் வேறு பகுதிகளில் இவற்றை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.