குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தினால் தேடப்படும் நபர்கள், நீதித்துறை நீதிமன்ற பிடியாணையில் தேடப்படும் நபர்கள் தேர்தல் வன்முறையில் ஈடுபடக்கூடும். அதனை அனுமதிக்க முடியாது. அத்தகைய நபர்களை உடன் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி இளஞ்செழியன்,
இவ்வாறு தேடப்படுபவர்கள் அண்மையில் உள்ள நீதிமன்றங்களில் உடனடியாக சரணடைய வேண்டும் என கஞ்சா தண்டனைக் குறைப்பு வழக்கொன்றில் அளித்துள்ள தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் வன்முறைகளில் பாதாள உலகக் கோஷ்டியினர் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் அவர்களைத் தேடிப் பிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கென சாதாரண பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்தினால் தேடப்படுபவர்கள் மற்றும் பிடியாணையில் தேடப்படுபவர்களைக் கைது செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் வன்முறைக்கு யாழ்ப்பாணத்தில் இடமில்லை. வன்முறையில் ஈடுபடும் நபர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். பாரதூரமான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு தேர்தல் தினத்தன்று வாக்களிப்பதற்கான பிணை அனுமதியும் வழங்கப்படமாட்டாது என்றும் நீதிபதி இளஞ்செழியன் அந்தத் தீர்ப்பில் எச்சரிக்கை செய்துள்ளார்.
போதைப் பொருளாகிய கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தார். அத்துடன் அதனை விற்பனை செய்தார் என குற்றஞ்சாட்டி, பொலிசாரினால் கைது செய்யப்பட்ட 60 வயதுடைய வயோதிபர் ஒருவர் விளக்கமறியலில் இருந்து வருகின்றார். இந்த வயோதிபரைப் பிணையில் செல்ல அனுமதிக்கக் கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் பிணைமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான நீதிமன்ற விசாரணையின் போது தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்குத் தானே குற்றவாளி என அந்த வயோதிபர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, அவர் முற்குற்றம் எதனையும் செய்யவில்லை. அவருக்கு அறுபது வயது. சந்தர்ப்ப வசத்தினாலேயே அவர் நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிற்கின்றார். எனவே, அவருடைய வயதையும், முற்குற்றம் செய்யவில்லை என்பதையும் கவனத்திற் கொண்டு, அவருக்கு கட்டாய சிறைத் தண்டனைத் தீர்ப்பினை அளிக்காமல், தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.
வழக்கு விசாரணையையும், எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தையும் ஆராய்ந்து தீர்ப்பளித்த நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:-
தேர்தல் காலத்தில் வன்முறைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றத் தாக்குதல் கைதிகள், போதைவஸ்து கைதிகள், வாள்வெட்டு மற்றும் கோஷ்டி சண்டித்தன கைதிகள் தெரு ரவுடித்தன கைதிகள் என பாரதூரமான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள கைதிகள், தேர்தல் முடிவடைந்து, புதிய பாராளுமன்றம் கூடும் வரையில், பிணையில் வெளியில் வரமுடியாதவாறு, நீதிமன்ற கட்டளைக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் தினத்தன்று வாக்களிப்பதற்கும் இவர்களுக்குப் பிணை அனுமதி வழங்கப்படமாட்டாது, நீதிமன்றமானது, தேர்தல் காலப்பார்வையாளரோ அல்லது கண்காணிப்பாளரோ அல்ல. வன்முறை குற்றவாளிகளை கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்கும் பாதுகாவலன்.
நீதிமன்றமே, சட்டத்தின் மேலான பாதுகாவலன். தேர்தல் வன்முறையால் வாக்காளர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படக் கூடாது. அதேபோன்று வேட்பாளர்களுக்கும் எவ்வித இடைஞ்சல்களும் ஏறப்படக் கூடாது என்பதற்காகதக்தான் பெரும் குற்றச்சாட்டு கைதிகள் விளக்மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் வன்முறை இல்லாத இடமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தை வைத்திருக்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் நீதிமன்றங்களுக்கு உண்டு. ஆகவே, சட்டத்தை எவரும் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. நீதிமன்றப் பிடியாணையில் தேடப்படும் அனைத்து நபர்களும் தேர்தல் வன்முறையில் ஈடுபட முதுடியாதவாறு, கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, தேடப்படுடிவர்கள் அண்மையில் உள்ள நீதிமன்றங்களில் உடனடியாக சரணடைய வேண்டும். இந்த வழக்கின் எதிரி கஞ்சா விற்பனை செய்தமை உடைமையில் வைத்திருந்தமை என்பன அவர் செய்த குற்றங்களாகும்.
இந்தக் குற்றங்களைப் புரிந்த ஒருவருக்கு அதிகபட்சமாக ஓராண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிப்பதற்கு போதைவஸ்து கட்டளைச் சட்டம் பரிந்துரை செய்கின்றது.
இருப்பினும் எதிரியின் சார்பில் செய்யப்பட்டுள்ள சட்டத்தரணியின் கருணை விண்ணப்பம் மன்றினால் பரிசீலிக்கப்படுகின்றது. அறுபது வயது வயோதிபர் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடக்கூடிய நபரல்ல. இவர், எதுவித முற்குற்றமும் செய்யவில்லை என்பதன் அடிப்படையில் மன்று அவருடைய வயதுக்கு மதிப்பளித்து, கட்டாய சிறைத் தண்டமையைத் தவிர்த்து, 40 ஆயிரம் தண்டம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகின்றது.
தண்டத்தைச் செலுத்தத் தவறினால், ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி இளஞ்செழியன் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.