அரசியல் வாதிகள் காலத்தின் தேவைகேற்ப தங்களை மாற்றி கொள்ளவேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதாவது நீண்ட காலமாக அரசியல் வாதிகள் வெறுமனே எதிர் கட்சியையோ அல்லது கடந்த கால அரசாங்கத்தையோ குறை கூறுவதில் மட்டுமே தமது நேரத்தை செலவிடுகின்றனர். இதனை விடுத்து மக்கள் நலன் சார்ந்த பொது விடயங்களிலும் தம்மை ஈடுபடுத்தி கொள்ள இவர்கள் முன் வர வேண்டுமென்பதே எனது கருத்தாகும்.
இதைவிட தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளிர்காக பல லட்சம் ரூபாய்களையும் பல மணி நேரத்தையும் செலவிடும் இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் ஒரு ரூபாய் அல்லது ஒரு மணி நேரத்தையேனும் செலவிட முன்வருவதில்லை என்பது வேடிக்கையானதும் வேதனையானதுமான விடயமாகும்.
தற்போது நாடு நீண்ட கால யுத்தம் முடிவடைந்து 6 வருட காலமாகியும் குறிப்பிட படக்கூடிய அரசியல் மாற்றம் இன்னும் ஏற்படுத்த படவில்லை எனதான் கொள்ள வேண்டும்.
அரசியல் வாதிகள் கட்சி தாவுவதிலும் தமது சட்டை பைகளை நிரப்புவதிலுமே அதிக கவனம் கொள்கிறார்களே அன்றி தமது மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் கவனமெடுக்க தவறுகின்றனர்.
எனவே எதிர் காலத்தில் இவ்வாறான மாற்றம் வேண்டுமாயின் மக்கள் தெளிவாக சிந்தித்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு வாக்களித்து எம்மை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என கேட்டுகொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.
தேர்தல் ஆரம்பிக்கபட்ட காலப்பகுதியில் குறைந்தளவான வன்முறை சம்பவங்களே இடம்பெற்று வந்தன என்று கூறி கொண்ட போதிலும் இன்று பிரதான அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் தங்கள் தேர்தல் நலன்களுக்காக பாதாள உலக குழுக்களை பயன்படுத்தும் அளவிற்கு இன்றைய தேர்தல் நிலைமை காணப்படுகின்றது எனும் போது அது ஒட்டு மொத்த நாட்டிற்குமே வெட்ககேடான விடயம் என்பதை தெரிவித்துகொள்கின்றேன்.
அது மட்டுமல்ல போதைப்பொருளை ஒழிப்போம் மற்றும் பாதாள உலக குழுவை ஒழிப்போம் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் கூட இதில் பங்கு வகித்ததாகவே கருதவேண்டியுள்ளது.
எனவே ஒரு நாட்டின் பாராளுமன்ற தேர்தல் என்ற வகையில் நீதியானதும் நடுநிலையானதுமான தேர்தல் நடாத்தபடுவது மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தப்பட வேண்டும் என்பதை இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்தார்.