Ad Widget

தமிழர் தரப்பில் ஐக்கியம் இருந்தால் மட்டுமே நல்லதொரு தீர்வினை தமிழ் மக்களுக்கென பெற்றுக் கொள்ள முடியும் டக்ளஸ் தேவானந்தா

மத்திய அரசை சரியான முறையில் கையாண்டு அவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலமே எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

unnamed

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈரோவில் மண்டபத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற யாழ்.முகாமையாளர் மன்றம் 2015 பொதுத் தேர்தல் கேள்வி நேர கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டுமென்பதையே நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

இதனையே இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
15 வருடங்களுக்கு மேலான ஆயுதப் போராட்ட மற்றும் 20 வருடங்களுக்கு மேலான ஜனநாயக வழியிலான அனுபவங்களின் அடிப்படையிலேயே நான் எனது செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.

தென்னிலங்கை அரசியல் வாதிகளுடன் எனக்கு நல்ல நட்புறவு உள்ளது என்பதுடன் தமிழர் தரப்பில் ஒர் ஐக்கியம் இருந்தால் மட்டுமே நிச்சயம் நல்லதொரு தீர்வினை தமிழ் மக்களுக்கென பெற்றுக் கொள்ள முடியும்.

போர்கால நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விடயங்கள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது,

எமது முயற்சிகள் நடைமுறைச்சாத்தியமான நீடித்த தீர்வையும் அடிப்படையாகக் கொண்டதாக அமையப் பெற்றுள்ளன.

போர்க்குற்ற விசாரணைகள் பக்கசார்பற்ற நடத்தப்பட வேண்டும் என்பதுடன் 1983 ஆம் ஆண்டிலிருந்து இறுதி யுத்தம் வரை நடைபெற்றதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

அதுமட்டுமன்றி குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமென்பதில் நாம் தெளிவானதொரு நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம்.

தமிழ் மக்களின் விகிதசாரத்திற்கு அமைவாகவே படையினரும், பொலிசாரும் இருக்க வேண்டுமேயொழிய தேவைக்கு அதிகமாக தமிழர்கள் பகுதிகள் நிலைநிறுத்தப்படக் கூடாது.
இதனடிப்படையில் தான் “மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம்” என்ற எமது நாம் கொண்டுள்ள அதேவேளை, எமது நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லையென்பதுடன் அபிவிருத்திக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பட்சத்தில் தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட வேண்டும்.

அத்துடன் சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொய் மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படல் வேண்டுமென்றும் தெரிவித்தார்.

போர் முடிவுற்றதன் பின்னர் போரின் விளைவால் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது கடந்தகால தவறான அரசியல் வழிநடத்தல்களினால் தான் எமது மக்கள் அளவிட முடியாத துன்ப துயரங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.

நாம் கடந்தகாலங்களில் படைத்தரப்பினர் வசமிருந்த பல காணிகளை அரசுடனான நல்லுறவைப் பயன்படுத்தி விடுவித்திருந்தோமேயொழிய வழக்குப் போட்டு விடுவிக்கவில்லை.
அத்துடன் எனது முயற்சியினால் தான் எமது மக்களுக்கு 50 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தினை கொண்டு வர முடிந்தது என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,

சுயதொழில் வாய்;ப்பினை ஏற்படுத்தி கணவனை இழந்த மற்றும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பினை அரசு மற்றும் கட்சி நிதியத்தின் ஊடாக வழங்கியுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாம் சொல்வதை செய்பவர்கள் செய்வதையே சொல்பவர்கள் என்பதுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே எமது அரசியல் இலக்காகும்.

எமக்கு அரசியல் பலம் கிடைக்கும் பட்சத்தில் அதன் ஊடாக இலத்திரனியல் மென்பொருட்களை உற்பத்தி செய்யும் குடிசை கைத்தொழிலாகவும் அதேநேரம் ஏனைய கைத்தொழிற்பேட்டைகளை உருவாக்கி அதனூடாகவும் வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் வேலைவாய்;ப்பினை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டினை உயர்த்தி பலப்படுத்துவதன் ஊடாக மேலதிக நீரை தேக்கி கிளிநொச்சி மக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் குடாநாட்டு மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு மத்திய அரசுடன் கலந்துரையாடி தீர்வு காண முடியுமென்றும் தெரிவித்தார்.

இதன்போது யாழ்.பல்கலைக்கழக பொறியியல்துறை பேராசிரியர் கலாநிதி சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts