ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்ட காணாமல் போன யுகம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றினை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களாக இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற வெகுசன ஊடக சீர்திருத்தங்கள் பற்றிய தேசிய மாநாட்டின் இறுதி அமர்வில் நேற்று (14) கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர், இன்றைய நல்லாட்சியில் அரச ஊடகங்கள், தனியார் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் போன்றோர் பாரிய பொறுப்பை சுமந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களின் பொறுப்பை சிறந்த முறையில் செயற்படுத்த தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கும், அவர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்கவும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன் நிற்பதாக தெரிவித்தார்.
இன்று நான் “வெகுசன ஊடக அபிவிருத்திப் பற்றி மக்கள் அறிவிப்பு – 2015” என்ற பிரகடனத்தில் கைச்சாத்திட்டேன். இது வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு தருணமாகும். இன்றைய நல்லாட்சியில் ஊடக கலாச்சாரத்தில் சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஆரம்பபடி நிலையாக நான் இதனை பார்க்கின்றேன்.
கடந்த காலங்களில் ஊடக அடக்கு முறையானது பல கோணங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை இருந்தது. அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். சிலர் நாட்டைவிட்டு வெளியேறினர். முக்கியமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமையை நான் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.
அரசாங்க ஊடகங்களை விட தனியார் ஊடகங்கள் மோசமாக தாக்கப்பட்டன. யாழ். உதயன் பத்திரிகை தீக்கிரையாக்கப்பட்டது. அதன் பல பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது. எனினும் இன்று அந்த கலாச்சாரம் இல்லை. நாட்டில் இன்று நல்லாட்சி நிலவுகின்றது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழ்நிலை இன்று நிலவுகின்றது. ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என்று துறைசார்ந்தோரால் எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இது தொடர்பில் எனக்கு எழுத்து மூல ஆவணம் ஒன்றை பெற்றுத் தாருங்கள். அதற்கு தேவையான நடவடிக்கைகளை நான் துரித கதியில் மேற்கொள்வேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.