ஆட்சிமாற்றத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டவை நடைமுறையில் இல்லை

ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை, நடைமுறையில் காண முடியாதுள்ளது என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடியிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் – வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று, முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்றது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

‘உயர்ஸ்தானிகர் ஒவ்வொரு வருடமும் வடக்குக்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து செல்வார். இன்றைய சந்திப்பும் அவ்வாறானதொரு சந்திப்பே. ஆட்சிமாற்றம் எவ்வாறான நன்மை, தீமைகளை உருவாக்கியுள்ளது என்பது தொடர்பில் கலந்துரையாடினோம்’ என்றார்.

அத்துடன், ‘இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வை ஏற்படுத்த அவுஸ்திரேலியா எல்லா விதத்திலும் பாடுபடும் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தன்னிடம் கூறியதாக’ முதலமைச்சர் கூறினார்.

இதேவேளை, யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனையும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், நேற்று சந்தித்துள்ளார். இதன்போது, மீள்குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன. இதன்போது, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா உதவ வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் கேட்டுக்கொண்டதுக்கிணங்க, மேற்படி வீட்டுத்திட்டம் தொடர்பில் தாம் கவனம் எடுத்து அதனைச் செயற்படுத்துவதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.

Related Posts