இனவாதம் பேசுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிடுவோர் மற்றும் எழுதுவோருக்கு எதிராக இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான தீர்மானத்தை நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டின்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித, இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தைப் பின்னோக்கிப் பார்த்து அதற்கான காரணங்களைக் களைந்து, அமைதியான ஒரு சகாப்தத்தை உருவாக்குவதற்காகவே கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழு நிறுவப்பட்டது.

இன ஒற்றுமை சீர்குலைவுக்கான காரண, காரியங்களை இந்த ஆணைக்குழு இனங்கண்டுள்ளது. இதற்கமைய இன, மத விரோத உரைகளும், எழுத்துகளும் இன ரீதியான – மத ரீதியான பதற்றங்களை உருவாக்கியுள்ளன.

மேலும் இந்த ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புக்கிணங்க இவற்றைத் தவிர்ப்பதற்குக் காத்திரமான அரசியல் இணக்கப்பாடும், சமாதானமாக இணைந்து செயற்படும் நிலைப்பாடும் ஏற்படவேண்டும்.

இந்த நிலையில், தடுப்புச் சட்டங்கள், அச்சட்டங்களைத் தீவிரமாக அமுல்படுத்துதல் ஆகிய அம்சங்களும் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்படவேண்டுமென சட்டவரைஞர்களுக்கு அறிவித்தல் விடுக்கவேண்டுமென நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கொண்டுவந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

சட்ட வரைஞர்களால் அனுப்பப்படும் வரைபு அரசு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். அத்துடன், சட்டமாக்கல் பிரகடனப்படுத்தப்படுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகவும் அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts