யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் வரவேற்பு மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது . இதற்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்தில் பிழை இருப்பதாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார்.
வடக்கு மாகாண சபையின் 26ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கட்டடதொகுதியில் இடம்பெற்று வருகின்றது . இதன்போதே அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கைக்கு வந்திருந்த இந்திய பிரதமர் ஒருவர் முதன் முதலாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இந்தவேளையில் மக்களது வரவேற்பு அமோகமாக இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இருக்கவில்லை. மிகவும் குறைந்த வரவேற்பே வழங்கப்பட்டு இருந்தது. மேலும் கீரிமலையில் நடைபெற்ற வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் மோடி கலந்து கொள்வதற்காக சென்ற காங்கேசன்துறை வீதியில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
இருப்பினும் தோரணத்திற்கு கீழ் வீதியில் குப்பைகள் காணப்பட்டன. அதனை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கூட யாழ். மாநகர சபைக்கோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ வரவில்லை. நிர்வாகத்தில் பிழைகள் இருக்கின்றது.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பங்கள் எதிர்காலத்தில் நடைபெறக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
					




 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							