யாழ்.நகரப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் உடனடியாக கவனத்தில் எடுத்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரை யாழ்.வணிகர் கழகம் கோரியுள்ளது.
இது தொடர்பில் யாழ். வணிகர் கழகம் ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
ரயில் பயணத்துடன் யாழ்.குடாநாட்டு மக்கள் நீண்ட பரீட்சயம் அற்றவர்கள். இரண்டு தசாப்தங்களின் பின்னர் இப்போதே ரயில் சேவை இங்கு இடம்பெறுகின்றது.இதனால் ரயில் தொடர்பில் இன்னமும் பரீட்சயமற்ற நிலையிலேயே மக்கள் இருக்கின்றனர்.
ரயில் சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் அவர்கள், பழக்கப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது.
மேலும் யாழ்ப்பாணத்தின் பிரதான ரயில் பாதை நகரப்பகுதியினூடாகவே செல்கின்றது.இதன்போது பல இடங்களில் ஒழுங்கான அலாரம் எழுப்பும் வசதியோ,சமிக்ஞைகளோ இல்லை.அத்துடன் பல பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் யாழ்ப்பாணத்தின் முக்கிய பாடசாலைகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.
எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு ,பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.