தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியும் ஆவல் வன்னி மக்களிடம் இப்போதும் உள்ளது!

வன்னியில் தற்போதுள்ள மக்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்குமான தேவை அதிகமாகக் காணப்படுகின்றது என சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு சென்று திரும்பிய பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் லாரா டேவிஸ் தெரிவித்துள்ளார்.

laura davis england

தனது உத்தியோகபூர்வ இணையப் பக்கத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கைகள் வெளியாவதைப் பிற்போடவேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்த வேண்டுகோளை சில நாட்களுக்கு முன்னர் மனித உரிமைகள் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

குறிப்பிட்ட விசாரணைகள் நடைபெறவேண்டுமென்ற பிரேரணைக்கு முக்கிய அனுசரணை வழங்கிய நாடு பிரிட்டன். நாங்கள் தொடர்ந்தும் அதே அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். ஐ.நா. விசாரணைக்குத் தகவல்களை வழங்கியவர்கள் – குறிப்பாக, பலத்த அச்சுறுத்தல் மத்தியில் தகவல்களை வழங்கியவர்கள் இந்தத் தாமதத்தை ஏற்பதற்கு சிரமப்படலாம். எனினும், இது சரியான செயற்பாடே. இலங்கையின் புதிய அரசு, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை, நல்லிணக்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுடன் ஒத்துழைப்பது போன்ற விடயங்களில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளது.

இந்த விடயங்களில் முன்னேற்றம் காண்பது, மோதலின் பாரம்பரியத்துக்குத் தீர்வை காண்பதற்கும் இலங்கையில் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வலுவான உள்நாட்டு சுயாதீன கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அவசியம்.

நான் கடந்த சில நாட்களுக்கு முன்னரே வன்னிக்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு திரும்பியுள்ளேன். முன்னர் விடுதலைப்புலிகளின் கோட்டையாகவும், இறுதிப்போர் இடம்பெற்ற பகுதியாகவும் விளங்கிய அந்தப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது.

மோதல்கள் எவ்வாறு முடிவுக்கு வந்தன என்பதையும், அதனால் ஏற்பட்டுள்ள காயங்கள் எப்படி இன்னமும் ஆறாமல் உள்ளன என்பதையும் புறக்கணிக்க முடியாது. மிகச் சிறந்த வீதிகளூடாக பயணம் செய்தவேளை எறிகணை மற்றும் துப்பாக்கிச் சன்ன சிதறல்களால் பாதிக்கப்பட்ட பல வீடுகளை என்னால் பார்க்க முடிந்தது. பல இராணுவ நினைவுத் தூபிகளைக் காணமுடிந்தது. விடுதலைப்புலிகளின் வலுவையும் உணரமுடிந்தது. அப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் எவற்றையும் காணமுடியவில்லை.

இராணுவத்தின் நலன்புரி கடைகளைக் காணமுடிந்தது. பலர் அவற்றால் தங்களது சிறு வியாபாரம் பாதிக்கப்படுவதாக முறையிடுகின்றனர். வன்னியில் மாஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் சில இயங்குகின்றன. அப்பகுதிக்கு அவசியமான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் உதவுகின்றன. தொழில் கலாசாரமொன்றையும் உருவாக்குகின்றன. வேறு சிலரும் அங்கு முதலீடு செய்கின்றனர் என்பது நல்ல செய்தி. வன்னிக்கு முதலீடுகள் அவசியம். பாரிய மற்றும் சிறிய முதலீடுகள். இராணுவம் பொதுமக்களின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிடத்தொடங்கிவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வன்னியில் தங்களது துயரங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பதை அறிவதற்குமான தேவை அதிகமாகக் காணப்படுகின்றது. சமூக ரீதியாகவும், பொருளாதரா ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் போராளிகளைச் சந்தித்தேன். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்கள் எதிர்பார்ப்பதை விட மிக மெதுவாகவே இடம்பெறுகின்றன.

பிரிட்டனின் திட்டங்களை முன்னெடுக்கும் பலரையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்தேன். நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த இரண்டு வருட காலப்பகுதியில் பிரிட்டன் 2 மில்லியன் பவுண்ஸை வழங்கும். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் நிலத்தை விடுவிக்கும் அரசின் அறிவிப்பு எனது விஜயம் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே வெளியானது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக அமையும். மக்களை தமது வாழ்வாதாரத்தை நோக்கியும், தொடர்ச்சியான வாழ்க்கையை நோக்கியும் அனுமதிப்பதாக அமையும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts