யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும் வீதியில் வியாழக்கிழமை (19) மாலை கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் கோப்பாய் பகுதியை சேர்ந்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பாடசாலையில் வெள்ளிக்கிழமை (20) நடைபெறவிருந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக தனது இல்ல அலங்கரிப்பை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் வீட்டுக்கு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றது.
குறித்த புகையிரத கடவையில் பாதுகாப்பு பொறிமுறைகளை ஏற்படுத்துமாறு அப்பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பல தடவைகள் கோரி வந்த போதிலும் இதுவரை அவற்றை அதிகாரிகள் செய்யவில்லை என அப்பகுதி மக்களால் குற்றம் சாட்டப்பட்டு பாதுகாப்பு பொறிமுறைகள் செய்யாமல் புகையிரதம் குறித்த பகுதியால் சேவையில் ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என கூறி அப்பகுதி மக்கள் புகையிரத பாதையில் மின் கம்பங்களை குறுக்காக போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தாம் உரிய அதிகாரிகளுடன் பேசி பாதுகாப்பு பொறிமுறைகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு புகையிரத பாதையில் போடப்பட்ட மின்கம்பங்களையும் அகற்றினர்.
எனினும் பாதுகாப்பற்ற ரயில் கடவைக்கு பாதுகாப்பு வழங்கும் படி கோரி இன்று வெள்ளிக்கிழமை (20) மீண்டும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட இருந்தது. விபத்து நடந்த இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்தினர்.
அதேவேளை இவ்விபத்து சம்பவத்தினால் இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெறவிருந்த யாழ்.இந்துக்கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.