ரயில் மோதி மாணவன் காயம்! நீராவியடியில் சம்பவம்!

trainசில மணிநேரங்களுக்கு முன்பாக ரயில் மோதி யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (19) 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக தனது இல்லத்தின் சோடனைகளை முடித்துக் கொண்டு, தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சமயமே இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது.

சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்து யாழ்.புகையிரத நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ரயில் நீராவியடிப் பிள்ளையார் கோயிலுக்கு முன் வீதியில் உள்ள கடவைப் பாதுகாப்பு போடப்படாத கடவையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவன் கடக்க முற்பட்ட வேளை மோதியதுடன் மாணவனை தூக்கி எறிந்ததுடன் பயணித்த சைக்கிளை சிறு தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளது.இவ் விபத்துச் சம்பவத்தில் கோப்பாயைச் சேர்ந்த குகதாசன் குகப்பிரியன்‬ என்பவரே படுகாயமடைந்தார்.இம்மாணவர் யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கற்கின்றார்.

 

இதேவேளை குறித்த விபத்துச் சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு புகையிரத கடவை அமைக்கப்படும் வரையில் புகையிரதம் வருவதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனக்கூறி, புகையிரதப் பாதையின் குறுக்காக மின் கம்பங்களை வைத்ததுடன் கடவைக்கு குறுக்காக, சீலைகளை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மக்களுடன் கலந்துரையாடி, நாளை தொடக்கம் கடவையில் காவலர்கள் இருவர் கடமையில் இருப்பர் என்றும் ஒரு வார காலத்திற்குள் இப்பகுதியில் புகையிரதக்கடவை அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து, தடைகள் அகற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் வரை நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் சேவை கடந்த சனாதிபதித்தேர்தலை முன்னிட்டு காங்கேசன் துறை வரை அவசர அவசரமாக பாதுகாப்பு கடவைகள் போடப்படாமல் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பிந்திக்கிடைத்த தகவலின்படி நாளை (20) யாழ் இந்துக்கல்லுாரியில் நடைபெற இருந்த வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்திருக்கின்றார்.

(இரண்டாம் இணைப்பு)

சம்பவத்தின் பின் உடனடியாக  நேரடியாக கண்ட சாட்சியான முன்னாள் ஆசிரியர் ஜெயபாலன் கருத்து தெரிவிக்கையில்  குறித்த மாணவன் காதில் “இயர்போன்” மாட்டியிருந்ததாகவும் அதனாலேயே ரயிலின் வருகையினை அவரால் உணரமுடியாமல் போயிருந்திருக்கலாம் என்று கூறினார். மேலும் துவிச்சக்கர வண்டியின் முன்பாகம் மட்டுமே ரயிலில் மோதியிருக்கின்றது என்றும் அதன் தாக்கத்தில் மாணவன் துாக்கி எறியப்பட்டு அருகில் இருந்த வீதியில் துாக்கி வீசப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நேரடியாக் ரயிலில் மோதியிருப்பின் நிலமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.

இதன்போது நெற்றிப்பகுாியில் 2 இடத்தில் வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது .தலையில் உள் பட்டை எலும்பு முறிவடைந்திருப்பதாகவும் அது உட் பக்கமாக குத்தியதால் இரத்தப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அபாயக்கட்டத்தினை இன்னும் ஒரிருநாட்களில் தாண்டிவிட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடவைப்பகுதியில் கவனம் எடுக்கவேண்டிய அவசியத்தினை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக  கூறப்படுகின்றது.

Related Posts