Ad Widget

விதை உரிமைக்காகப் போராடும் சிங்கள சகோதரர்கள் எமது மண் உரிமைப் போராட்டத்துக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்

எமது மண்ணைப் படையினரின் மூலம் இலங்கை அரசாங்கம் பறித்து வைத்திருக்கிறது. மண் இல்லாமல் விதை இல்லை. எனவே விதை உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள சகோதரர்கள் எமது மண் உரிமைப் போராட்டத்துக்காவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘விதை உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு’ முறிகண்டியில் இருந்து கொழும்பை நோக்கி நேற்று சனிக்கிழமை 11.10.2014 ஆரம்பித்திருக்கும் பாதயாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

விதைகள் தனியொருவருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ சொந்தமானவை அல்ல. அவை இயற்கைக்குச் சொந்தமானவை. இயற்கை எல்லாப் பிரதேசங்களிலும் அந்த அந்தப் பிரதேசங்களின் காலநிலை, மண்வளம், நீர்வளம் என்பவற்றுக்கேற்ற பயிர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் எங்களிடமும் வரட்சியைத் தாக்குப் பிடிக்கக்கூடிய, வெள்ளத்தில் மூழ்கினாலும் அழுகி இறக்காத, பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகாத, இரசாயன உரங்கள் தேவைப்படாத சுதேசியப் பயிரினங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில் கலப்பு இனங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய பின்னர் எமது பாரம்பரிய இனங்கள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.

எஞ்சியிருக்கும் ஒரு சில பாரம்பரிய இனங்களையும் பறித்துப் பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுக்கும் முயற்சியிலேயே அரசு இப்போது இறங்கியிருக்கிறது.

அதற்கு வசதியாகவே விதைகளைச் சேமித்து வைக்கும் உரிமையை விவசாயிகளிடமிருந்து பறித்து விவசாயப் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கும் விதத்தில் விதைகள் சட்டமூலத்தில் திருத்த மசோதா ஒன்றைக் கொண்டுவரவுள்ளது.

மண்ணை இழந்த வலி எங்களுக்குத் தெரியும். அதேபோன்றுதான் விதை இழப்பின் வலியும் கடுமையானது. விதைகளைச் சேமித்து வைக்கும் உரிமை விவசாயிகளிடம் இருந்து கைமாறினால் எங்களது விவசாயிகள் பாரம்பரிய நெல்லினங்களான பச்சைப் பெருமாளையோ, மொட்டைக் கருப்பனையோ வீட்டில் சேமித்து வைத்திருக்க முடியாது. அவ்வாறு செய்தால் கைது செய்யப்படலாம்.

பாரம்பரிய இனங்கள் எல்லாவற்றையும் இழந்தபின்னர் ஒவ்வொரு விதைப்புக்காகவும் பன்னாட்டு நிறுவனங்களிடமே அவர்களின் கலப்பின விதைகளுக்காகவும் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்காகவும் கையேந்த வேண்டிவரும். அவர்களின் இரசாயன உரங்களையும் கிருமிநாசினிகளையுமே வாங்க வேண்டி வரும். இந்த நச்சுஇரசாயனங்கள் இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களின் விதைகள் ஒருபோதும் விளைச்சலைத் தராது. நச்சு இரசாயனங்களால் நாம் மேன்மேலும் நோயாளிகளாக வேண்டி வரும்.

எனவே விவசாயிகளிடமிருந்து விதை உரிமையைப் பறிக்கும் அரசாங்கத்தின் மசோதாவுக்கு எதிராக தென்னிலங்கை மக்களுடன் சேர்ந்து நாமும் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமல்லாமல் நாட்டைப் பாதிக்கும் பொதுவான விடயங்களில் தென் இலங்கைச் சிங்களச் சகோதரர்களுடன் கைகோர்த்து அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, விதை உரிமையைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எப்பாவல மகாநாயக்கதேரர் மகமாங் கடவல பிரியரட்ண ஆகியோருடன் தென் இலங்கையில் இருந்தும் கிளிநொச்சியில் இருந்தும் ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது மகாநாயக்கதேரர் தென் இலங்கையின் பாரம்பரிய நெல் இனங்கள் சிலவற்றின் விதைகளை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கையளிக்க, அமைச்சர் த.குருகுலராஜா வடக்கின் பாரம்பரிய நெல் இனங்கள் சிலவற்றின் விதைகளை மகாநாயக்க தேரரிடம் கையளித்த விதைப் பரிமாற்றம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

Related Posts