சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பி.எல்.துஸ்மந்த, நேற்று புதன்கிழமை (17) தெரிவித்தார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸாருக்கிடையிலான கலந்துரையாடல் ஏழாலை பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது கருத்து கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் கடந்த வாரம் பல வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை இரகசிய பொலிஸ் குழுவொன்று மேற்கொண்டு வருகின்றது.
வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை இன்னும் சில நாட்களில் கைது செய்வோம்.
சுன்னாகம் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு, குற்றச்செயல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுன்னாகம் சந்தி, மல்லாகம் ஆகிய இடங்களில் கடந்த வாரம் 3 வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.